கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள கெலவரப்பள்ளி அணையில் இருந்து 2-ம் போக பாசனத்திற்காக வலது மற்றும் இடதுபுற கால்வாய்களில் நேற்று தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். இதில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் மொத்தம் 8,000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பயனடையும். இதன்மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி தாலுக்காவில் உள்ள தட்டகானபள்ளி, பூதிநத்தம் உள்ளிட்ட 22 கிராமங்கள் பயன்பெறும். அணையின் நீர் இருப்பு மற்றும் அணைக்கு நீர்வரத்து ஆகியவற்றை கருத்தில் கொண்டு 90 நாட்களுக்கு சுழற்சி முறையில் முதல் 10 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறந்தும், அடுத்த 5 நாட்கள் நிறுத்தியும், 6 நனைப்புகளுக்கு நீர் வழங்கப்படும். விவசாயிகள், பொதுப்பணித்துறையினருடன் ஒத்துழைத்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறும் நோக்கத்துடன் செயல்படுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.