ராஜபாளையத்தில் பொதுமக்கள் போராட்டம்
ராஜபாளையத்தில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்போன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜபாளையம்,பிப்.
ராஜபாளையத்தில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட தனியார் செல்போன் கோபுரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, செல்போன் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தனியார் கட்டிடம்
ராஜபாளையம் அருகே உள்ள தென்றல் நகரில் பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு மத்தியில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மேல் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கான்கிரீட்டால் அடித்தளம் அமைக்கப்பட்டது.
இது குறித்து அப்பகுதியினர் கேட்டபோது, தண்ணீர் தொட்டி கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவில் அடித்தளம் மீது தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்றுள்ளது. தற்போது சுமார் 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
முற்றுகை போராட்டம்
இது குறித்து தகவல் அறிந்ததும் நேற்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகளை உடனே நிறுத்தக் கோரி சம்பந்தப்பட்ட செல்போன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே வலுவிழந்த கட்டிடத்தின் மேலே செல்போன் கோபுரம் அமைக்கப்படுவதால், தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.
ஏற்கனவே அங்கு அமைந்துள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் கதிர் வீச்சின் காரணமாக அப்பகுதியைச் சேர்ந்த பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் புதிய செல்போன் கோபுரம் நிறுவப்படுவதாகவும் அப்பகுதியினர் குற்றம் சாட்டினர்.
பேச்சுவார்த்தை
தென்றல் நகரில் இருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் புதிய செல்போன் கோபுரம் ஏதும் அமைக்கப்படாது என வருவாய் துறையினர் மற்றும் போலீசார் உறுதி அளித்துள்ள நிலையில், புதிய செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சி தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தாசில்தார் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கை விட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story