நஞ்சை புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க பூமி பூஜை
நஞ்சை புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை அமைக்க பூமி பூஜையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
நொய்யல்
பூமி பூஜை
கரூர் மாவட்டம், நஞ்சை புகளூர் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ 406.50 கோடி செலவில் கதவணை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு பொதுப்பணித்துறை சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாரா தலைமை தாங்கினார். பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளர் விஜயகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
பின்னர் பொக்லைன் எந்திரத்தில் ஏறி அதனை இயங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொக்லைன் எந்திரம் மூலம் காவிரி ஆற்றின் குறுக்கே நெடுகிலும் மணல் அள்ளப்பட்டு குழிகள் தோண்டப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு வேலை தொடர்ந்து நடைபெறும். இந்த பணிகள் மூன்று ஆண்டுகளில் முடிவடையும். புதிய கதவணை 1,056 மீட்டர் நீளம் கொண்டதாக உள்ளது. இதன் மூலம் புகளூர் காகித ஆலைக்கு தங்கு தடையின்றி தண்ணீர் கிடைக்கும். கதவணை மூலம் சுமார் 0.8 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும். புதிய கதவணை அமைந்த பிறகு வாங்கல் வாய்க்கால் மூலம் 1,458 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.
நிலத்தடி நீர்மட்டம் உயரும்
அதேபோல் நாமக்கல் மாவட்டம் மோகனூர் வாய்க்கால் மூலம் 2,583 ஏக்கர்நிலம் பாசன வசதி பெறும்.புதிய கதவணையின் மூலம் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் குடிநீர் ஆதாரம் மேம்படுவதோடு நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதன் காரணமாக விவசாய நிலங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். விளை பொருட்களின் வரத்து அதிகரிக்கும்.
அதேபோல் விவசாயம் சார்ந்த தொழில்கள் மேம்படும். கதவணையை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கு சுற்றுலாத் தலமாக அமைய வாய்ப்பு இருப்பதால் அதனைச் சார்ந்த பொது மக்களின் பொருளாதாரம் மேம்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story