ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு


ஓட்டல் உரிமையாளர் வீட்டில் 15 பவுன் நகை- ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 22 Feb 2021 7:36 PM GMT (Updated: 22 Feb 2021 7:36 PM GMT)

அரும்பாவூரில் திருப்பதி கோவிலுக்கு சென்ற ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரூ.2 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

வேப்பந்தட்டை:

ஓட்டல் உரிமையாளர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூர் பெரியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 40). இவர் அதே ஊரில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு சதீஷ்குமார் தனது குடும்பத்தினருடன் திருப்பதி கோவிலுக்கு சென்றார்.
இந்நிலையில் நேற்று காலை சதீஷ்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உடனடியாக திருப்பதியில் இருந்த சதீஷ்குமாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, அரும்பாவூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன.
நகை- பணம் திருட்டு
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பீரோக்களில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 15 பவுன் நகைகள் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூரில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். அரும்பாவூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம் மற்றும் அரும்பாவூர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story