கூட்டுறவு வங்கியில் உள்ள வைப்பு தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது
கூட்டுறவு வங்கியில் உள்ள வைப்பு தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்
மதுரை
கூட்டுறவு வங்கியில் உள்ள வைப்பு தொகை ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
ரேஷன் கடைகள்
மதுரை மேற்கு சட்டசபைக்கு உட்பட்ட சோலையழகுபுரம் மற்றும் துரைச்சாமி நகர் ஆகிய இடங்களில் பொது வினியோக திட்டசேவை மையத்தினை திறப்பு விழா நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு முதல் விற்பனையை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 23 ஆயிரத்து 491 முழுநேர மற்றும் 9 ஆயிரத்து 538 பகுதிநேர ரேஷன் கடைகள் என மொத்தம் 33 ஆயிரத்து 29 கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் 1,094 முழு நேரகடைகள் மற்றும் 263 பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,357 ரேஷன் கடைகள் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 90 லட்சத்து 63 ஆயிரத்து 368 குடும்ப அட்டைகளும், மதுரை மாவட்டத்தில் 9 லட்சத்து 18 ஆயிரத்து 489 குடும்ப அட்டைகளும் உள்ளன. தமிழகம் முழுவதும் கடந்த 31-ந் தேதி வரை 2 ஆயிரத்து 487 கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
கூட்டுறவு சங்கங்கள்
மக்களின் குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை வினியோகிக்கும் பொருட்டு அம்மா நகரும் நியாய விலைக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 3 ஆயிரத்து 501 நகரும் நியாயவிலைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 5 லட்சத்து 36 ஆயிரத்து 847 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைகின்றனர். மதுரை மாவட்டத்தில் 51 வாகனம் மூலம் 101 அம்மா நகரும் நியாய விலைக்கடை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 ஆயிரத்து 765 குடும்ப அட்டைதாரர்கள் பயன் அடைகின்றனர். நஷ்டத்தில் இயங்கிய கூட்டுறவு சங்கங்கள் தற்போது நல்லநிலையில் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் ரூ.26 ஆயிரம் கோடியாக இருந்த வைப்புத் தொகை தற்போது ரூ.59 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத்துறைக்கு அகில இந்திய அளவில் 30 விருதுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள் சதீஷ் (மதுரைசரகம்) சரவணன் (பொது விநியோகதிட்டம்) உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கடன்
மதுரை மாநகராட்சி மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம், மாடக்குளம ஆகிய பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சம் செலவில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, எல்லா அரசும் வளர்ச்சிப் பணிகளுக்கு கடன் பெற்றுத்தான் ஆக வேண்டும். எதிர்க்கட்சி தலைவருக்கு இது பற்றி தெரியாதா என்று புரியவில்லை. விவசாயிகளுக்கு கூட்டுறவு கடனை அதிக அளவு தள்ளுபடி செய்தது அ.தி.மு.க. தான். ஆனால் தி.மு.க. தான் அதிக தள்ளுபடி செய்தது என்று மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார் என்றார்.
Related Tags :
Next Story