அரசு ஊழியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் திக்குமுக்காடியது
அரசு ஊழியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் திக்குமுக்காடியது
மதுரை
வருவாய், மின்சாரம், அங்கன்வாடி, மக்கள் நலப்பணியாளர்கள் என அரசு ஊழியர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்திற்கு குறைகளை தீர்க்க வந்த பொதுமக்கள் பரிதவிப்பிற்கு உள்ளாகினர்.
அங்கன்வாடி ஊழியர்கள்
பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது வழக்கம். அப்போது அவர்களை அரசு அதிகாரிகள் சமாதானம் செய்து அனுப்பி வைப்பார்கள். ஆனால் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையினர், மக்கள் நலப்பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மின் ஊழியர்கள் என பலரது போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் திக்குமுக்குகாடியது.
தமிழக வருவாய்த்துறையில் காலிபணியிடங்களை நிரப்புவது, கருணை அடிப்படையில் நியமனம், பணிவரன் முறைப்படுத்துவது, இளநிலை, முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்றம் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை அலுவலர்கள் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அதனால் மதுரை மாவட்டத்தில் வருவாய் துறை பணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் 6-ம் நாளாக நேற்றும் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அதனால் கலெக்டர் அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
குடியுரிமை சான்றுகள்
கடந்த 4-ந் தேதி முதல் மக்கள் நலப்பணியாளர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தினமும் போராடி கொண்டு இருக்கின்றனர். மீண்டும் மக்கள் நலப்பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகம் எதிரே அமர்ந்து சாலையிலே சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 19-வது நாளாக நேற்றும் அவர்களது போராட்டம் நீடித்தது.
தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் குடியுரிமை சான்றுகள் ஓப்படைக்கும் போராட்டம் நேற்று நடந்தது. ஊருக்கே விளக்கேற்றிய எங்கள் வாழ்வில், தமிழக அரசு ஒளியேற்றாமல் இருளில் மூழ்கடித்துள்ளது என்று கூறி ஓப்பந்த மின்சார தொழிலாளர்கள் தங்களது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பொதுமக்கள் பரிதவிப்பு
மதுரை மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் உதவியாளர்கள் நேற்று முதல் கலெக்டர் அலுவலகம் அருகே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த போராட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்படுகிறது. கலெக்டர் அலுவலகம் எதிரே அவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள், 38 ஆண்டுகளாக பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படியுடன் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதற்கிடையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் ஏராளமானோர் தங்களது குறைகளை தீர்க்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு கலெக்டர் அன்பழகன் தலைமையில் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். ஆனால் வருவாய் துறையினரின் போராட்டத்தால் தங்கள் பிரச்சினை தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தீருமா என்ற பொதுமக்கள் பரிதவிப்பில் உள்ளனர். இதுகுறித்து மனு கொடுக்க வந்தவர்கள் சிலர் கூறியதாவது:- எங்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். நில அளவை, பட்டா பெயர் மாற்றம் போன்றவற்றை பணிகளை தேர்தல் தேதிக்கு முன்பு செய்தால் தான் உண்டு. தேர்தல் தேதி அறிவித்து விட்டால், வருவாய்த்துறையினர் தேர்தல் பணி மட்டுமே மேற்கொள்வார்கள். தற்போது வருவாய்த்துறையினரின் போராட்டம் காரணமாக எங்கள் குறைகள் தீருமா என்று சந்தேகம் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினர்.
Related Tags :
Next Story