பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Feb 2021 2:31 AM IST (Updated: 23 Feb 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாளையங்கோட்டை, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

நெல்லை:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து பாளையங்கோட்டை, சேரன்மாதேவியில் தி.மு.க.வினர்  ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தி.மு.க.வினர் நேற்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க.வினர் பாளையங்கோட்டை சித்தா கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் டி.பி.எம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப் பேசுகையில், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.63-க்கும், டீசல் ரூ.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்போது கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 110 டாலராக இருந்தது. ஆனால் தற்போது கச்சா எண்ணெய் விலை 55 டாலருக்கு விற்கிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை ரூ.100-ஐ நெருங்கி விட்டது. காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், விலை உயர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய பா.ஜனதாவினர் தற்போது தினமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறார்கள். இதற்கு தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வும் துணை போகிறது. மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய, மாநில அரசுகளை தூக்கி எறியவேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. அரசுக்கு மக்கள் சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

குதிரை வண்டியில் புறப்பட்டனர்

முன்னதாக, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா மற்றும் தி.மு.க.வினர் 2 குதிரை வண்டிகளில் வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் இருந்து புறப்பட்டு முருகன்குறிச்சி வழியாக வந்து பாளையங்கோட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

சேரன்மாதேவி

சேரன்மாதேவியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர்கள் முத்துப்பாண்டி என்ற பிரபு, ராஜகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி, மாநில வர்த்தக அணி கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கணேஷ்குமார் ஆதித்தன், கழக மூத்த நிர்வாகி பத்தமடை பரமசிவம், ஒன்றிய செயலாளர்கள் ராதாபுரம் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், பெல்சி, நாங்குநேரி ஆரோக்கிய எட்வின், களக்காடு பி.சி.ராஜன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story