தேசிய செய்திகள்

புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி; காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது; நாராயணசாமி ராஜினாமா + "||" + Puducherry Assembly loses confidence motion The Congress government was overthrown; Narayanasamy resigns

புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி; காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது; நாராயணசாமி ராஜினாமா

புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி; காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது; நாராயணசாமி ராஜினாமா
புதுச்சேரி சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் தோல்வி அடைந்து காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, கவர்னர் தமிழிசையை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுத்தார்.
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 3 எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசு பரிந்துரையின் பேரில் நியமித்துக்கொள்ளலாம்.

நாராயணசாமி
கடந்த 2016-ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களில் வெற்றி பெற்று நாராயணசாமி முதல்-அமைச்சர் ஆனார். அரசுக்கு கூட்டணி கட்சியான தி.மு.க. 3 எம்.எல்.ஏ.க்கள், ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. என 4 பேரின் ஆதரவு இருந்து வந்தது. இந்தநிலையில் 2 அமைச்சர்கள், 2 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். கடந்த ஆண்டு கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் பாகூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் பதவி பறிக்கப்பட்டு இருந்தது.

எதிர்க்கட்சிகள் புகார்
இதனால் காங்கிரஸ் அரசுக்கான பலம் 14 ஆக குறைந்தது. அதேநேரத்தில் எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ் 7, அ.தி.மு.க. 4, நியமனம் (பா.ஜனதா) 3 பேர் என 14 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதாக கவர்னரிடம் ரங்கசாமி தலைமையில் புகார் தெரிவித்தனர். இதை ஏற்று சட்டசபையை கூட்டி 22-ந் தேதி (அதாவது நேற்று) பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கெடு விதித்தார்.

அரசுக்கு மேலும் நெருக்கடி
இந்தநிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க அரசு தரப்பும், தோல்வி அடையச் செய்ய எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டின. இந்த சூழலில் ஆளுந்தரப்புக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளருமாக இருந்தவருமான லட்சுமி நாராயணனும், தி.மு.க. எம்.எல்.ஏ. வெங்கடேசனும் நேற்று முன்தினம் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் அரசு நெருக்கடிக்கு உள்ளானது. இதையடுத்து காங்கிரஸ், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். அப்போது இந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத்தின்போது இறுதி முடிவை எடுப்போம் என்று நாராயணசாமி தெரிவித்தார்.

சட்டசபை கூடியது
இதையொட்டி சட்டசபை கூட்டத்தில் தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அந்தந்த கட்சிகளின் கொறடாக்கள் உத்தரவிட்டு இருந்தனர். எம்.எல்.ஏ.க்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கவர்னரின் கெடுவை தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் விதமாக புதுவை சட்டசபையின் சிறப்பு கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை நடவடிக்கையில் ஆளுங்கட்சி தரப்பில் (சபாநாயகரையும் சேர்த்து) காங்கிரஸ், தி.மு.க., சுயேச்சை எம்.எல்.ஏ. என 12 பேரும், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., நியமன எம்.எல்.ஏ.க்கள் 14 பேரும் பங்கேற்றனர்.

அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
சபாநாயகர் சிவக்கொழுந்து திருக்குறள் படித்து சபை நடவடிக்கையை தொடங்கி வைத்தார். சபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்-அமைச்சர் பேசினார். அப்போது மத்திய அரசு, கவர்னராக இருந்த கிரண்பெடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார். குறிப்பாக இலவச அரிசி வழங்கவிடாமல் தடுத்தது, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அனுமதிக்காதது, புயல் நிவாரணம் வழங்காதது, புதுவை மாநிலத்துக்கு உரிய நிதி ஒதுக்காதது குறித்து தெரிவித்தார். தற்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் இறங்கி உள்ளதையும் கடுமையாக விமர்சித்தார்.

கூச்சல், குழப்பம்
பாரதீய ஜனதாவின் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை நாளை உங்களுக்கும் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகளை பார்த்து தெரிவித்தார். மேலும் பல்வேறு மாநிலங்களில் பெரும்பான்மையின்றி பாரதீய ஜனதா கட்சி ஆட்சி அமைத்ததை பட்டியலிட்டார். அவரது குற்றச்சாட்டுக்கு எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்தனர். அவர் பேசி முடிக்கும் தருவாயில் அரசு கொறடா அனந்தராமன் எழுந்து, நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டுரிமை உள்ளதா? இல்லையா? ஓட்டுரிமையை எதிர்க்கட்சி தலைவர் ஏற்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். ஓட்டுரிமை குறித்து சுப்ரீம் கோர்ட்டும், தேர்தல் ஆணையமும் உறுதி செய்துள்ள நிலையில் அந்த கேள்விக்கே இடமில்லை என்று தெரிவித்தனர். பதிலுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் எதிர்ப்பு தெரிவிக்கவே, இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சபையில் கூச்சல், குழப்பமாக இருந்தது.

அரசு கவிழ்ந்தது
இதனால் வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு சபையில் இருந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியேறினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள் காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியே வந்தனர். இதைத்தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து பேசும்போது, நம்பிக்கை கோரும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியவில்லை. அந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது என்று கூறினார். இதனால் புதுவையில் இருந்து வந்த காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது.

ராஜினாமா
இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் சென்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். தொடர்ந்து நாராயணசாமி நிருபர்களிடம் கூறும்போது ‘நம்பிக்கை கோரும் தீர்மானத்தின்மீது நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை கிடையாது என்பதை நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால் அதை சபாநாயகர் ஏற்காததால் வெளிநடப்பு செய்து நான் எனது முதல்-அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை கவர்னரிடம் கொடுத்துள்ளேன்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்க என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க. உறுதுணையாக இருந்தது. அவர்களை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். வருகிற தேர்தலில் அவர்களுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள்’ என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவின் தாக்கத்தை குறைக்க தீவிர பரிசோதனை; முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தல்
கொரோனாவின் தாக்கத்தை குறைக்க உமிழ்நீர் பரிசோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று நாராயணசாமி கூறினார்.
2. மதவாத கூட்டணி பா.ஜ.க.வை மக்கள் புறக்கணிப்பார்கள்; நாராயணசாமி பேட்டி
மதவாத பா.ஜ.க. அணியை மக்கள் புறக்கணித்து மதசார்பற்ற கூட்டணியை வெற்றிபெறச் செய்வார்கள் என்று நாராயணசாமி கூறினார்.
3. மதவாதம், பிரிவினைவாதத்துக்கு மக்கள் இடம் கொடுக்கமாட்டார்கள்; நாராயணசாமி நம்பிக்கை
புதுச்சேரி மக்கள் மதவாதம், பிரிவினை வாதத்துக்கு இடம் கொடுக்கமாட்டார்கள் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.
4. புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது - மு.க.ஸ்டாலின்
புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு தொல்லை கொடுத்த பாஜகவை மக்கள் விடக்கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
5. கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும்; காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி ஆவேசம்
கட்சி விட்டு கட்சி மாறும் ஓடுகாலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று காமராஜ்நகர் தேர்தல் பிரசாரத்தில் நாராயணசாமி கூறினார்.