நெல்லையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்


நெல்லையில் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க குவிந்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 22 Feb 2021 9:24 PM GMT (Updated: 22 Feb 2021 9:24 PM GMT)

நெல்லையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர்.

நெல்லை:
நெல்லையில் நடந்த குறை தீர்க்கும் கூட்டத்தில், மனு கொடுக்க பொதுமக்கள் குவிந்தனர். அவர்களிடம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்குமாறு கலெக்டர் விஷ்ணு அறிவுறுத்தினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நடந்தது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
அப்போது மாற்றுத்திறனாளிகள் 17 பேர் மனு கொடுக்க வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அவர்களிடம் கலெக்டர் நேரில் சென்று மனுக்களை வாங்கினார்.

கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், சமூக பாதுகாப்பு திட்ட உதவி கலெக்டர் குமாரதாஸ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாந்தி எம்ரால்டு குளோரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று நடந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, விபத்து மரணம் உதவித்தொகை, குடிநீர் வசதி மற்றும் வீட்டுமனை பட்டா கேட்டு ஏராளமானோர் மனு கொடுக்க வந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பதிவு செய்யும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. 

முககவசம்

மனு கொடுக்க வந்தவர்களிடம் கலெக்டர் விஷ்ணு, நீங்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணிவதுடன் கை, கால்களை சோப்பு போட்டு சுத்தமாக கழுவ வேண்டும். இருமல், சளி என்றால் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பகுஜன் சமாஜ் கட்சியினர் மாநில செயலாளர் தேவேந்திரன், மாவட்ட தலைவர்கள் சிவசுப்பிரமணியன், விஜயன் ஆகியோர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், “நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் பல ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. அதனை மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்து ஆக்கிரமிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை அரசு செலவில் அகற்றி தரவேண்டும். பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அவர்கள் மீதும், ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு துணை போன அதிகாரிகள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலங்களை பட்டியலின மக்களின் பயன்பாட்டிற்கு மட்டும் பயன்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது.

ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில எஸ்.சி., எஸ்.டி. மக்கள் கூட்டமைப்பினர் கவுரவத்தலைவர் சின்னத்துரை, மாவட்ட தலைவர் ஜெயபால், செயலாளர் தேவதாஸ், பொருளாளர் நடராஜன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். கண்டியபேரியில் உள்ள கோவில் நிலத்தை தனியாருக்கு பட்டா மாற்றம் செய்து கொடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஊர்த்தலைவர் சின்னத்தம்பி மற்றும் சப்பானி, வேல்முருகன் ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், “பேட்டை எம்.ஜி.ஆர். நகர் தங்கம்மன் கோவில் தெருவில் நாங்கள் 50 வருடத்திற்கு மேலாக குடியிருந்து வருகிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த பகுதியிலேயே குடியிருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

போலீசாருடன் வாக்குவாதம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தலைவர் நாராயணசாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். அவர்களிடம் போலீசார், 3 பேர் மட்டும் உள்ளே செல்லுமாறு கூறினார்கள். உடனே அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் கொடுத்த மனுவில், “மானூர் தாலுகா பிராஞ்சேரி கிராமத்தில் உள்ள அரசன்குளம் கரையை அப்புறப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

Next Story