ஊத்துப்பாளையத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


ஊத்துப்பாளையத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 12:39 AM GMT (Updated: 23 Feb 2021 12:39 AM GMT)

ஊத்துப்பாளையத்தில், குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குடிநீர் திட்ட பணிகள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்காக அன்னூர் வழியாக குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. 

இந்த குடிநீர் குழாய் பதிக்கும் பணியால் கஞ்சப்பள்ளி ஊராட்சி பகுதியில் ஏற்கனவே செல்லும் குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக செல்கிறது. இதனால் பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.

கடந்த 8 மாதங்களாக இந்த அவலம் நீடித்து வருகிறது என்று அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சினை குறித்து, கடந்த 6 மாதத்திற்கு முன்பு தமிழக சட்டசபை சபாநாயகருக்கு, ஊராட்சி பொதுமக்கள் மற்றும் ஊத்துப்பாளையம் கிராம மக்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை மனு

மேலும் கடந்த வாரம் அன்னூர் வந்த சபாநாயகரை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு, மீண்டும் கோரிக்கை மனு அளித்தனர்.
 இதனால் அப்போது பரபரப்பு ஏற்பட்டது. அப்போது இந்த விவகாரம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

 இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்தநிலையில் இதுவரை குடிநீர் குழாய்கள் எதுவும் சரி செய்யப்படாததால் குடிநீர் வீணாகி, பொதுமக்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த ஊத்துப்பாளையம் கிராம பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று காலை ஏராளமான பெண்கள் காலிக்குடங்களுடன் அன்னூர்- அவினாசி பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அன்னூர் துணை தாசில்தார் நித்திய வல்லி, வருவாய் அதிகாரி பெனாசிர் பேகம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக உடைபட்ட குடிநீர் குழாய்க்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறியதை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

 முன்னதாக போராட்டம் காரணமாக அன்னூர்- அவினாசி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

Next Story