கோவை வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 30 பேர் கோவை வருகை


கோவை வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 30 பேர் கோவை வருகை
x
தினத்தந்தி 23 Feb 2021 6:12 AM IST (Updated: 23 Feb 2021 6:12 AM IST)
t-max-icont-min-icon

கோவை வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 30 பேர் கோவை வந்தனர்.

மேலும் பிரதமர் பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத 4 கார்களும் கோவை கொண்டு வரப்பட்டன.

பிரதமர் கோவை வருகை

கோவையில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கோவை வருகிறார். அவருடைய சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் டெல்லியில் இருந்து காலை 7.45 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு 10.25 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 10.30 மணிக்கு புறப்பட்டு 11.20 மணிக்கு புதுச்சேரி வருகிறார். 

புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு அவர் ஹெலிகாப்டர் மூலம் மதியம் 2.10 மணிக்கு மீண்டும் சென்னை செல்கிறார்.
பின்னர் மதியம் 2.15 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு பிற்பகல் 3.35 மணிக்கு மோடி கோவை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 3.40 மணிக்கு கார் மூலம் அவர் 3.50 மணிக்கு பீளமேடு கொடிசியா அரங்கம் செல்கிறார். 

அங்கு நிறைவு பெற்ற பல்வேறு அரசு திட்டப்பணிகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திரமோடி அர்ப்பணிக்கிறார். மேலும் பல்வேறு அரசு திட்டப்பணிகளையும் அவர் தொடங்கி வைத்து பேசுகிறார்.

பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அவர் மாலை 5 மணிக்கு அருகில் உள்ள கொடிசியா மைதானம் வருகிறார். அங்கு நடக்கும் பாரதீய ஜனதா கட்சி பொதுக்கூட்டத்தில் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்கிறார்கள்.

 பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு மாலை 5.50 மணிக்கு அவர் அங்கிருந்து புறப்பட்டு 6 மணிக்கு கோவை விமான நிலையம் செல்கிறார். மாலை 6.05 மணிக்கு தனி விமானத்தில் புறப்பட்டு நரேந்திர மோடி இரவு 9.15 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றடைகிறார்.

பிரதமர் நரேந்திரமோடி வருகையையொட்டி கோவையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழக போலீசார் மத்திய பாதுகாப்பு படையினருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் கொடிசியா வளாகம் மற்றும் மைதானம் போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

 தற்போது கொடிசியா வளாகத்துக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு இரவு-பகலாக 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்ட மைதானத்தில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் கோவை மாநகர போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

கமாண்டோக்கள் 30 பேர் வருகை

மேலும் மோடியின் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வையிடுவதற்காக தமிழக கூடுதல் டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி நேற்று கோவை வந்தார். அவர் கோவை மாநகர உயர் போலீஸ் அதிகாரியுடன் பிரதமர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் (எஸ்.பி.ஜி.) 30 பேர் நேற்று காலை 11 மணியளவில் கோவை வந்தனர். மேலும் அதே விமானத்தில் நரேந்திர மோடி பயணம் செய்வதற்காக குண்டு துளைக்காத 4 கார்கள் கோவை கொண்டு வரப்பட்டுள்ளன.

 அந்த கார்கள் கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திரமோடி விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கிற்கும், கொடிசியா மைதானத்திற்கும் செல்ல உள்ளதால் அதற்கு வசதியாக குண்டு துளைக்காத கார்கள் கோவை கொண்டு வரப்பட்டுள்ளன.

 மேலும் பிரதமரின் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள், மாநகர போலீசார் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Next Story