கோவை அருகே குளத்தில் கிடந்த 7 சாமி சிலைகள் மீட்பு
கோவை அருகே பேரூர் புட்டுவிக்கி குளத்தில் இருந்து 7 சிலைகள் மீட்கப்பட்டன. இதுகுறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பரபரப்பு சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
குளத்தில் கிடந்த சாமி சிலைகள்
கோவை அருகே பேரூர் பகுதியில் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் புட்டுவிக்கி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரையோரம் உள்ள சாலையில் பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது குளத்தில் சாமி சிலைகள் கிடந்ததை கண்டனர். உடனடியாக இதுகுறித்து அவர்கள் பேரூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
இது சிலை தொடர்பான வழக்கு என்பதால் போலீசார் பேரூர் தாசில்தார் முத்துகுமாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள் குளத்தின் கிடந்த 7 சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
தொல்லியல் துறை
இதையடுத்து கண்டெடுக்கப்பட்ட சிலைகள் பேரூர் தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. கருங்கல்லால் செய்யப்பட்ட 2 அடி கருமாரியம்மன் சிலை ஒன்றும், உலோகத்தால் செய்யப்பட்ட ½ அடி முதல் 1½ வரை கொண்ட விநாயகர், கிருஷ்ணர், சரஸ்வதி, மகாலட்சுமி, கருமாரியம்மன், விஷ்ணு துர்க்கை ஆகிய 6 சிலைகள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சிலைகளின் உண்மை தன்மை மற்றும் பழமை குறித்து தொல்லியியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதற்காக அந்த சிலைகள் தொல்லியல் துறைக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. இந்த சம்பவம் குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவிலில் இருந்து கடத்தப்பட்டதா?
இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கூறியதாவது:-
குளத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சிலைகள் கோவில் சிலைகள் ஆகும். எனவே இந்த சிலைகள் ஏதாவது கோவிலில் இருந்து கடத்தி குளத்தில் வீசப்பட்டு இருக்கலாம். மேலும் சிலைகள் கைப்பற்றப்பட்ட குளத்தில் சிவப்பு நிற பை ஒன்றும் மீட்கப்பட்டது. அந்த பைக்குள் ஆதிபராசக்தி கோவிலுக்கு பக்தர்கள் அணிந்து செல்லும் சிவப்பு நிற மாலை இருந்தது. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுதவிர சாமி சிலைகள் குளத்தில் வீசப்பட்டதற்கான காரணம் என்ன? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் எதுவும் சிலைகள் காணாமல் போனதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
பரபரப்பு
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவை இடையர்வீதியில் ஐம்பொன் சிலைகளின் பாகங்களை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கும், இந்த சாமி சிலைகள் விவகாரத்துக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்பன போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story