நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை


நடத்தையில் சந்தேகம்: மனைவியை எரித்து கொன்று வியாபாரி தற்கொலை தீயில் கருகிய மகளுக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 23 Feb 2021 4:11 PM GMT (Updated: 23 Feb 2021 4:11 PM GMT)

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை உயிருடன் தீவைத்து எரித்து கொன்று விட்டு இரும்பு வியாபாரியும் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதை தடுக்க வந்த மகள் பலத்த தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சென்னை, 

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், அச்சரப்பாக்கம் அருகே உள்ள இரும்புலி கிராமம் மேட்டு காலனியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 40). இவர், பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி ஜீவா (37). இவர்களுக்கு கிருபாவதி என்ற (19) மகள் உண்டு. இவர், கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

பார்த்திபன், அவரது மனைவி ஜீவாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு வந்தார். இதனால் அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு பார்த்திபனுக்கும், அவரது மனைவிக்்கும் வழக்கம்போல் வாய்த்தகராறு ஏற்பட்டது. பிறகு இருவரும் தூங்க சென்றுவிட்டனர்.

உயிருடன் எரித்துக்கொலை

நேற்று அதிகாலையில் பார்த்திபன் எழுந்து பார்த்தபோது, மனைவி ஜீவா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போதும் ஆத்திரம் அடங்காத பார்த்திபன் வீட்டில் வைத்திருந்த மண்எண்ணெய்யை எடுத்து வந்து ஜீவா மீது ஊற்றி தீ வைத்து உயிரோடு கொளுத்தினார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மகள் கிருபாவதி, தந்தையை தடுக்க வந்தபோது அவர் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்தார். தனது கண் முன்னே மனைவியும், மகளும் உயிரோடு எரிவதை கண்ட பார்த்திபன், தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் 3 பேரும் அலறிய சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் 3 பேர் மீது எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் உடல் முழுவதும் எரிந்ததில் ஜீவா பரிதாபமாக இறந்தார்.

உயிரிழந்தார்

இதுபற்றி தகவல் அறிந்துவந்த அச்சரப்பாக்கம் போலீசார், தீயில் கருகி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பார்த்திபனையும், அவரது மகள் கிருபாவதியையும் மீட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்திபனும் பரிதாகமாக உயிரிழந்தார். கிருபாவதிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி அச்சரப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Next Story