சத்துணவு ஊழியர்கள் மறியல்


சத்துணவு ஊழியர்கள் மறியல்
x
தினத்தந்தி 23 Feb 2021 4:40 PM GMT (Updated: 23 Feb 2021 4:40 PM GMT)

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 236 பேர் கைதாகினர்.

தேனி:

சாலை மறியல்
சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களை முழுநேர ஊழியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் சத்துணவு ஊழியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதன்படி தேனியிலும் மறியல் செய்தனர். இதற்காக பள்ளிவாசல் தெருவில் அவர்கள் திரண்டனர். அவர்களில் பலர் கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து வந்தனர். 

ஊர்வலத்துக்கு முன்பாக அங்கு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் ஜெயபாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் கிருபாவதி, சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் முருகன் மற்றும் பலர் பேசினர்.

236 பேர் கைது
பின்னர் அங்கிருந்து நேரு சிலை சிக்னலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். சிக்னல் அருகில் போலீசார் சாலையில் இரும்பு தடுப்புகள் அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். மறியலால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதனால், மறியலில் ஈடுபட்ட 10 ஆண்கள் உள்பட 236 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் தேனியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்னர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Next Story