பாதாள சாக்கடை தொட்டியை மூடக்கோரி டிராக்டர் சிறைபிடிப்பு


பாதாள சாக்கடை தொட்டியை மூடக்கோரி டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 10:59 PM IST (Updated: 23 Feb 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை தொட்டியை மூடக்கோரி பொதுமக்கள் டிராக்டரை சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் பாதாள சாக்கடை தொட்டியை மூடக்கோரி பொதுமக்கள் டிராக்டரை சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிராக்டர் சிறைப்பிடிப்பு

வேலூர் சத்துவாச்சாரி பள்ளித்தெருவில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை திட்டத்திற்காக பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டது. பின்னர் பாதாள சாக்கடை தொட்டி அமைக்கப்பட்டு, அதனை சுற்றி மண் கொட்டி நிரப்பப்பட்டது. 

ஆனால் பாதாள சாக்கடை தொட்டியை மூடி வைத்து மூடவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரரிடம் தெரிவித்து உள்ளனர்.

அதன்பின்னரும் தொட்டியை மூடுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இன்று மாலை அந்த பகுதியில் இருந்த சிமெண்டு கற்களை எடுத்து செல்வதற்காக வந்த ஒப்பந்ததாரரின் டிராக்டரை சிறைப்பிடித்தனர். 

பாதாள சாக்கடை தொட்டியை உடனடியாக மூடினால் தான் டிராக்டரை விடுவிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இரும்பு கம்பிகள்

அதையடுத்து அங்கு வந்த ஒப்பந்ததாரர் ஓரிருநாளில் பாதாள சாக்கடை தொட்டியை மூடிவிடுவேன் என்றும், அதுவரை அதனை சுற்றி இரும்பு கம்பிகள் (பேரி கார்டு) வைப்பதாக தெரிவித்தார். 

அதையடுத்து டிராக்டரை பொதுமக்கள் விடுவித்தனர். அதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பள்ளித்தெருவின் முடிவில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளிக்கு தினமும் ஏராளமான மாணவ-மாணவிகள் சென்று வீடு திரும்புகிறார்கள். 

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை தொட்டியின் உள்ளே எதிர்பாராதவிதமாக மாணவர்கள் தவறி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே காலதாமதம் செய்யாமல் உடனடியாக பாதாள சாக்கடை தொட்டியை மூட வேண்டும் என்று தெரிவித்தனர்.

Next Story