அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திண்டுக்கல்லில் 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வுபெறும் போது பணிக்கொடையாக ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று 2-வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கருப்பு ஆடை அணிந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவி தமிழ்செல்வி தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் செல்வதனபாக்கியம், பொருளாளர் மல்லிகா, சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Related Tags :
Next Story