மாவட்ட செய்திகள்

பூங்காவுடன் கூடிய குளத்திற்கு குடும்பத்தோடு செல்லும் பொதுமக்கள் + "||" + Public going with family to the pool with the park

பூங்காவுடன் கூடிய குளத்திற்கு குடும்பத்தோடு செல்லும் பொதுமக்கள்

பூங்காவுடன் கூடிய குளத்திற்கு குடும்பத்தோடு செல்லும் பொதுமக்கள்
புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட பூங்காவுடன் கூடிய குளத்திற்கு குடும்பத்தோடு பொதுமக்கள் செல்கிறாா்கள்.
விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள குளம் பல ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடமாக பாழ்பட்டு கிடந்தது. நகராட்சியின் நூற்றாண்டு விழாவையொட்டி ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதியின் மூலம் ரூ.1½ கோடி மதிப்பில் இந்த குளம் சீரமைக்கப்பட்டது. அவ்வாறு சீரமைக்கப்பட்ட இந்த குளத்தை சுற்றிலும் நடைபயிற்சி செல்ல ஏதுவாக நடைமேடை தளங்கள், பூங்காவுடன் குழந்தைகள் விளையாட விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கான கருவிகள், இணைய வசதி, பண்பலை வானொலி, ஆவின் பாலகம், விநாயகர் ஆலயம் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டு புதுப்பொலிவானது. அம்மா பூந்தோட்ட குளம் என்ற பெயரிடப்பட்ட இந்த குளத்தை நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் விழுப்புரம் நகர மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்கள் பலர் தங்கள் குழந்தைகளுடன் பூங்காவுடன் கூடிய இந்த குளத்திற்கு வருகை புரிந்தனர். சிறுவர்கள், சிறுமிகள் அங்கு விளையாட அமைக்கப்பட்டுள்ள உபகரணங்களில் போட்டி போட்டுக்கொண்டு ஆரவாரத்துடன் விளையாடி மகிழ்ந்தனர். அதுமட்டுமின்றி பொதுமக்கள் பலர், அங்குள்ள நடைமேடை தளங்களில் நடைபயிற்சி மேற்கொண்டதோடு உடற்பயிற்சியும் செய்தனர். இப்பூங்கா அதிகாலை திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை தற்போது திறந்து இருக்கும் எனவும், இன்னமும் கால நிர்ணயம் செய்யவில்லை என்றும் நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். விழுப்புரம் நகரில் சினிமா தியேட்டர்களை தவிர பொழுதுபோக்கிற்கென சொல்லும்படியாக எந்தவொரு அம்சமும் இல்லாத நிலை இருந்து வந்தது. இருக்கின்ற நகராட்சி பூங்காவும் பராமரிப்பின்றி பொலிவிழந்து காணப்பட்டு வருகிற நிலையில் தற்போது புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டுள்ள பூங்காவுடன் கூடிய குளத்திற்கு பொதுமக்கள், குடும்பத்தோடு அதிகளவில் வந்து பொழுதை கழித்துச்சென்ற வண்ணம் உள்ளனர். அதேநேரத்தில் இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.