மாவட்ட செய்திகள்

26-ந் தேதி அரளிப்பாறை மஞ்சுவிரட்டு + "||" + On the 26th Aralipparai Manchuvirattu

26-ந் தேதி அரளிப்பாறை மஞ்சுவிரட்டு

26-ந் தேதி அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
சிங்கம்புணரி அருகே புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு வருகிற 26-ந் தேதி நடைபெறுவதையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சிங்கம்புணரி, பிப்.
சிங்கம்புணரி அருகே புகழ்பெற்ற அரளிப்பாறை மஞ்சுவிரட்டு வருகிற 26-ந் தேதி நடைபெறுவதையொட்டி அங்கு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு
தை மாதம் பிறந்தாலே சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற மஞ்சுவிரட்டாக திருப்பத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு இருந்து வருகிறது. இதற்கு அடுத்ததாக சிங்கம்புணரி அருகே அரளிப்பாறையில் மாசி மகத்தன்று நடைபெறும் மஞ்சுவிரட்டு மற்றொரு சிறப்பாக இருந்து வருகிறது. 
இந்த மஞ்சுவிரட்டு ஆயிரம் ஆண்டு பழமையாகவும், ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. அரளிப்பாறையில் ஆண்டுதோறும் மாசி மக திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் இங்கு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும். 
மாசி மகம்
சுமார் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கேரள சிங்க வள நாட்டு மன்னர் இந்த பகுதியை கைப்பற்றி இப்பகுதியை முல்லை மங்கலம், சீர்சேர்ந்த மங்கலம், கண்ணமங்கலம், சதுர்வேத மங்கலம் மற்றும் வேழமங்கலம் என 5 மங்கலங்களாக பிரிந்து கேரள சிங்க வளநாட்டு மன்னர் ஆட்சி நடத்தி வந்ததாக வரலாறு கூறப்படுகிறது. அவரது ஆட்சி காலத்தில் இருந்து தொடங்கிய இந்த அரளிப்பாறை மஞ்சுவிரட்டு இன்று வரை மாசி மகம் தினத்தன்று இந்த பகுதியைச் சேர்ந்த ஐந்து நிலை நாட்டார்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
இதையொட்டி இந்தாண்டு நாளை மறுதினம் (26-ந் தேதி) இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியை காண்பதற்காக அரளிப்பாறையில் ஆயிரக்கணக்கான மக்கள் அமர்ந்து பார்ப்பது மற்றொரு தனிச்சிறப்பாக இருந்து வருகிறது. 
முன்னேற்பாடு 
இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக தற்போது அங்கு வாடிவாசல் அமைக்கும் பணி, பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி, தடுப்பு கட்டைகள் மூலம் வேலிகள் அமைக்கும் பணி உள்ளிட்டவைகள் சிங்கம்புணரி தாசில்தார் திருநாவுக்கரசு தலைமையில் வட்ட துணை ஆய்வாளர் (நில அளவை) ஜாகீர் உசேன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. 
மேலும் வருவாய் ஆய்வாளர் முரளி, மருதிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா வெங்கடேசன், ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டு வாடிவாசல் அமைக்கப்பட்ட பகுதி குறித்தும் பொதுமக்கள், பார்வையாளர்கள், மாடுபிடிவீரர்கள் ஆகியோர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.