மஞ்சுவிரட்டு


மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 23 Feb 2021 7:11 PM GMT (Updated: 23 Feb 2021 7:11 PM GMT)

மஞ்சுவிரட்டு விழா

சிங்கம்புணரி, பிப்.
சிங்கம்புணரி அருகே வேங்கைப்பட்டி மதுராபுரிக்கு உட்பட்ட தொட்டிய காத்தன் வயலில் தை மாத படையலை முன்னிட்டு மஞ்சு விரட்டு விழா நடத்தப்பட்டது. ஆண்டுதோறும் உச்சிகருப்பன் சாமிக்கு தை மாதம் படையல் போட்டு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையால் விவசாயம் இப்பகுதியில் செழித்தன. வயல்வெளிகளில் நெல் கதிர்கள் அறுவடை ஆகாமல் இருந்த காரணத்தால் இந்த வருடம் தை படையலை மாசி படையலாக மாற்றி விழா கொண்டாடப்பட்டது. கொேரானா தாக்கம் குறைந்து தளர்வு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு இப்பகுதியில் குறிப்பாக சிங்கம்புணரி பகுதியில் நடைபெறும் முதல் மஞ்சுவிரட்டு இதுவேயாகும்.
முன்னதாக உச்சி கருப்பர் சாமிக்கு மாசிமாத படையலை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்யப்பட்டு கிராம மக்கள் வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து மஞ்சுவிரட்டு தொழுவத்தில் கோவில் காளைக்கு முதல் மரியாதை செய்யப்பட்டு அவிழ்த்து விடப்பட்டது. அதன் பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தொழுவத்தில் இருந்து மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. இவ்விழாவில் அ.தி.மு.க. செய்தி தொடர்பாளர் மருது அழகு ராஜ் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் கலந்து கொண்டனர். சிங்கம்புணரி, பிரான்மலை, பொன்னமராவதி, நத்தம், கொட்டாம்பட்டி, மேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 300 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. காளைகளை அடக்கிய இளைஞர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவின்போது 23 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் வினோத் குமார் (வயது 26), நவீன்(18), கணபதி (66) ஆகியோர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மதுராபுரி மங்கான் கூட்டம் பங்காளிகள் நடத்தினர்.

Next Story