பாலம் உடைந்ததால் நெல் மூடைகளுடன் சென்ற லாரி கவிழ்ந்தது


பாலம் உடைந்ததால் நெல் மூடைகளுடன் சென்ற லாரி கவிழ்ந்தது
x
தினத்தந்தி 23 Feb 2021 7:12 PM GMT (Updated: 23 Feb 2021 7:12 PM GMT)

மங்கலக்குடி அருகே ஆற்றுப்பாலம் உடைந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொண்டி, பிப்.
மங்கலக்குடி அருகே ஆற்றுப்பாலம் உடைந்து நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
தரைப்பாலம்
திருவாடானை தாலுகா, மங்கலக்குடியை அடுத்த துத்தாக்குடி கிராமத்தின் அருகே செல்லும் ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. சேதமடைந்த நிலையில் இருந்து வந்த இப்பாலத்திற்கு அடியில் தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. நேற்று இப்பகுதியில் உள்ள அல்லிக்கோட்டை கிராமத்தில் இருந்து சிவகங்கை மாவட்டம் கண்ணங்குடிக்கு சுமார் 35 டன் நெல் மூடைகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது.
அப்போது தரைப்பாலத்தில் கதிர் அறுவடை செய்யும் எந்திரத்தை நிறுத்தி வாகனத்தை கழுவி கொண்டிருந்தனராம். இதனால் லாரி டிரைவர் லாரியை ஓரமாக ஓட்டிச் சென்றுள்ளார். ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்த தரைப்பாலம் பாரம் தாங்காமல் உடைந்தது. இதில் அந்த லாரி ஆற்றில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவரான சிவகங்கை மாவட்டம் கல்லலை சேர்ந்த காளிதாஸ், தூத்துக்குடியை சேர்ந்த லோடுமேன்கள் 9 பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மீட்பு
இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப் பகுதியில் உள்ள சுமார் 30-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இந்த பாலத்தில் தினமும் பயணம் செய்வது வழக்கம். தற்போது பாலம் சேதம் அடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக இந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story