மாவட்ட செய்திகள்

சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை: மந்திரி முருகேஷ் நிரானி + "||" + Strict action if authorities are involved in Chikballapur blast case: Minister Murugesh Nirani

சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை: மந்திரி முருகேஷ் நிரானி

சிக்பள்ளாப்பூர் வெடிவிபத்து சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை: மந்திரி முருகேஷ் நிரானி
சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடி விபத்து சம்பவத்தில் அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி முருகேஷ் நிரானி தெரிவித்துள்ளார்.

அமித்ஷாவுடன் சந்திப்பு

கர்நாடக கனிம வளத்துறை மந்திரி முருகேஷ் நிரானி ஒரு நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் நேற்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து அவர் பேசினார். இந்த சந்திப்பின் போது பஞ்சமசாலி சமூகத்தினர் இடஒதுக்கீடு கேட்டு போராடி வருவது மற்றும் முதல்-மந்திரி எடியூரப்பா, அரசுக்கு எதிராக பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. பேசி வருவது குறித்து அமித்ஷாவிடம், முருகேஷ் நிரானி தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக அரசியல் நிலவரம் குறித்தும் அமித்ஷாவிடம் முருகேஷ் நிரானி பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. பின்னர் மந்திரி முருகேஷ் நிரானி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிகாரிகள் மீதும் நடவடிக்கை

சிக்பள்ளாப்பூரில் நடந்த வெடிவிபத்தில் 6 தொழிலாளர்கள் பலியாகி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சம்பவம் நடந்திருக்க கூடாது. பலியானவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். வெடி விபத்து சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் காட்டாமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டவிரோத கல்குவாரி விவகாரத்தில் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநிலத்தில் கல்குவாரிக்கு அரசிடம் இருந்து முறையாக உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே வெடிப்பொருட்களை பயன்படுத்த வேண்டும். உரிமம் இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக புதிய விதிமுறைகளை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கல்குவாரிகளுக்கு பயன்படுத்தும் வெடிப்பொருட்களை கையாளும் தொழிலாளர்களுக்காக சிறப்பு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேவையற்ற வெடி விபத்துகளை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

யத்னால் பற்றி...

மேலும் அவரிடம், முதல்-மந்திரிக்கு எதிராக பேசி வரும் பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வை கட்சியில் இருந்து நீக்குவது குறித்து அமித்ஷாவிடம் தெரிவிக்கப்பட்டதா என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதிலளித்த மந்திரி முருகேஷ் நிரானி, யத்னால் எம்.எல்.ஏ. குறித்து அமித்ஷாவிடம் எந்த விதமான புகாரும் அளிக்கவில்லை என்று கூறினார்.