மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் 90 பேர் கைது


மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்கக்கோரி  மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல்  90 பேர் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 8:12 PM GMT (Updated: 23 Feb 2021 8:12 PM GMT)

மாற்றுத்திறனாளிகள் திடீர் சாலை மறியல் 90 பேர் கைது

கடலூர், 

40 சதவீதம் உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 ஆயிரம் மாத உதவித்தொகை வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்கி, முழு ஊதியம் வழங்கிட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்ப அட்டைகளை முன்னுரிமை (பி.எச்.எச்) அட்டைகளாக அறிவித்திட வேண்டும்.
ஒரு கண் பார்வை இழந்தவர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 23-ந் தேதி (அதாவது நேற்று) மாநிலம் தழுவிய அளவில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

பேச்சுவார்த்தை

அதன்படி நேற்று காலை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மாவட்ட செயலாளர் ஆளவந்தார் தலைமையில் பொருளாளர் நடேசன், முன்னாள் மாவட்ட செயலாளர் அமர்நாத் ஆகியோர் முன்னிலையில் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக திரண்டு வந்தனர்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாற்றுத்திறனாளிகளை தடுத்து நிறுத்தி, சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

சாலை மறியல்

அதனை ஏற்றுக்கொள்ளாத மாற்றுத்திறனாளிகள் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலையில் அமர்ந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, புதுநகர் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் எழில்தாசன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 பெண்கள் உள்பட 90 பேரை பேரை கைது செய்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Next Story