போராட்ட களமான திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம்: மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது


போராட்ட களமான திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம்: மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது
x
தினத்தந்தி 23 Feb 2021 8:46 PM GMT (Updated: 23 Feb 2021 8:46 PM GMT)

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று போராட்ட களமாகவே மாறியது. சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி கலெக்டர் அலுவலக வளாகம் நேற்று போராட்ட களமாகவே மாறியது. சாலைமறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கூண்டோடு கைது செய்தனர்.

போராட்ட களமானது

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று அரசு பணியில் இருப்பவர்கள், விவசாயிகள், மாற்றுத்திறனாளிகள், அங்கன்வாடி ஊழியர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கலெக்டர் அலுவலக வளாகமே போராட்ட களம்போல காட்சி அளித்தது.

அதற்கேற்ப போலீசாரும் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்திட போலீசார் அனுமதி மறுத்தாலும் தடையை மீறி போராட்டங்கள், மறியல் என 5-க்கும் மேற்பட்ட போராட்டங்கள் அரங்கேறியது.

கருப்பு உடையில் மறியல்

சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்றும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைவர் சத்தியவாணி தலைமையில் அனைவரும் கருப்பு உடை அணிந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமானார்கள். 

போலீசார் அனுமதி மறுத்தும் தடையை மீறி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்புள்ள சாலையில் திடீரென அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 350-க்கும் மேற்பட்டவர்களை செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கூண்டோடு கைது செய்து, வாகனத்தில் அழைத்து சென்றனர்.

Next Story