கூலிப்படை மூலம் கணவனை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
தா.பேட்டை அருகே விபத்தில் கணவன் இறந்ததாக நாடகம் ஆடியது அம்பலம் ஆனது. கூலிப்படை மூலம் கணவனை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
தா.பேட்டை,
தா.பேட்டை அருகே விபத்தில் கணவன் இறந்ததாக நாடகம் ஆடியது அம்பலம் ஆனது. கூலிப்படை மூலம் கணவனை கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியை, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றிபோலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பள்ளி ஆசிரியை
தா.பேட்டை வடுகர் தெருவை சேர்ந்தவர் பழனிவேல் (வயது 41). துறையூரில் உள்ள தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார். இவரது மனைவி மோகனாம்பாள் (38) தா.பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த இரண்டு மாதமாக தான் அவர் தனது குடும்பத்தினருடன் தா.பேட்டை வடுகர் தெருவில் வசித்துவந்தார். பழனிவேல் தினமும் மோட்டார் சைக்கிளில் துறையூருக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.
விபத்தில் இறந்ததாக புகார்
கடந்த 19-ந் தேதி துறையூருக்கு வேலைக்கு சென்ற பழனிவேல் இரவு வீடு திரும்பவில்லை. இதனால் மோகனாம்பாள் தனது கணவர் செல்போனில் தொடர்பு கொண்டபோது போன் ஸ்விட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் கணவரின் நண்பர் உப்பிலியபுரம் அரசு போக்குவரத்து கிளை பணிமனையில் காசாளராக பணிபுரியும் ராஜா (42) என்பவரிடம் விசாரித்துள்ளார்.
இந்தநிலையில் துறையூரில் இருந்து தா.பேட்டை செல்லும் சாலையில் தேவரப்பம்பட்டி வனப்பகுதியில் சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளுடன் பழனிவேல் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மோகனாம்பாள் தனது கணவர் பழனிவேல் விபத்தில் இறந்ததாக ஜெம்புநாதபுரம் போலீசில் புகார் அளித்தார்.
கூலிப்படையை வைத்து கொலை
ஆனால் பழனிவேல் இறந்துபோனதில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முசிறி போலீஸ் துணை சூப்பிரண்டு பிரம்மானந்தம் மேற்பார்வையில் தா.பேட்டை இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் மற்றும் போலீசார் மோகனாம்பாள், ராஜா ஆகியோரை போலீஸ்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது விசாரணையில், மோகனாம்பாள், ராஜா ஆகியோருக்கு இடையே இருந்த கள்ளக்காதலை கணவர் கண்டித்ததால், கூலிப்படையை வைத்து கொலைசெய்து கணவர் விபத்தில் இறந்ததாக நாடகமாடியது தெரியவந்தது.
கள்ளத்தொடர்பு
மேலும், துறையூர் தாலுகா ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் பழனிவேல், ராஜா ஆகியோர் குடும்பத்தினருடன் வசித்து வந்த போது ராஜாவிற்கும், மோகனாம்பாளுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. பழனிவேல் வீட்டில் இல்லாதபோது இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனால் பழனிவேல், மோகனாம்பாள் இடையே குடும்பதகராறு, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். பொங்கல் பண்டிகை சமயத்தில் மோகனாம்பாள், பழனிவேல் இருவரையும் அவரது உறவினர்கள் சமாதானம் செய்தனர். இதைத்தொடர்ந்து தா.பேட்டை வடுகர் தெருவில் குடும்பத்தினருடன் வசித்துவந்துள்ளனர்.
கூலிப்படை உதவி
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு துறையூர் பகுதியில் வீட்டுமனை வாங்கியது தொடர்பாக பழனிவேல், ராஜா ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் மோகனாம்பாள் கள்ளக் காதலன் ராஜாவிடம் அடியாட்கள் உதவியுடன் கணவரை அடித்து மிரட்டி வைக்குமாறு கூறியதாக தெரிகிறது.
இதனால் ராஜா உப்பிலியபுரம் வலையப்பட்டியை சேர்ந்த சுதாகர்(44) என்பவரிடம் பழனிவேலு மீது தாக்குதல் நடத்துவதற்கு உதவிகேட்டுள்ளார். சுதாகர் திருச்சியில் உள்ள கூலிப்படை சேர்ந்த பரத் என்பவரை ராஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து ராஜாவும் கூலிப்படை பரத்தும் பழனிவேலை தாக்குதல் நடத்துவதற்கு பல கட்டங்களாக திட்டமிட்டுள்ளனர்.
கழுத்தை இறுக்கி கொலை
இதற்காக ராஜா சிறிது, சிறிதாக பரத்திற்கு சுமார் ரூ.1½ லட்சம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட பரத் பழனிவேல் மீது எந்தத்தாக்குதலும் நடத்தாததால் கோபமடைந்த ராஜா பரத்திடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதையடுத்து கடந்த 19-ந் தேதி இரவு துறையூரிலிருந்து மோட்டார் சைக்கிளில் தா.பேட்டை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பழனிவேலை கூலி படையினரிடம் ராஜா அடையாளம் காட்டியுள்ளார்.
பின்தொடர்ந்து சென்ற பரத் மற்றும் கூலிப்படையினர் 3 பேர் தா.பேட்டை அருகே தேவரப்பப்பட்டி வனப்பகுதியில் பழனிவேலை வழிமறித்து கயிற்றால் கழுத்தை இறுக்கிகொலை செய்துள்ளனர். அப்போது உயிருக்கு போராடிய பழனிவேல் தன்னை காப்பாற்றி கொள்ள முயன்றபோது கூலிப்படையினர் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது.
3 பேர் கைது
மேலும் பழனிவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்து சேதப்படுத்தி விபத்து நடந்ததுபோல் சாலையோரத்தில் பழனிவேல் உடலை விட்டுச்சென்றுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் மோகனாம்பாள், கள்ளக்காதலன் ராஜா, சுதாகர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கூலிப்படையை சேர்ந்த பரத் மற்றும் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story