‘மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச அருகதை கிடையாது’ - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி


‘மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச அருகதை கிடையாது’ - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 9:01 PM GMT (Updated: 23 Feb 2021 9:01 PM GMT)

‘மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச அருகதை கிடையாது’ என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கடுமையாக தாக்கி பேசினார்.

நெல்லை:
‘மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச அருகதை கிடையாது’ என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கடுமையாக தாக்கி பேசினார். 

இதுதொடர்பாக அவர் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேட்பாளர்கள் வெற்றி

தமிழக பா.ஜனதா கட்சி சார்பில் தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதியிலும் தேர்தல் பணியை தொடங்கி உள்ளோம். தேசிய தலைவர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகின்றனர். பேரணி, கட்சி அலுவலகங்கள், தேர்தல் அலுவலகங்கள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

நாளை (வியாழக்கிழமை) பிரதமர் மோடி கோவையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அவர் தென் மாவட்டங்களுக்கும் பிரசாரம் செய்ய வருகை தர இருக்கிறார். 28-ந் தேதி உள்துறை மந்திரி அமித்ஷா விழுப்புரத்தில் பிரசாரம் செய்கிறார். இதேபோல் தேசிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்ய வருகின்றனர். 

இரட்டை இலக்கத்தில்...

வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வேட்பாளர்கள் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்வார்கள். இதை அடிப்படையாக கொண்டு இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம்.

கூட்டணி பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கப்படும். தமிழகத்துக்கு அந்தந்த துறைகள் சார்பில் தேவையான நிதி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரூ.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு சீனியாரிட்டி அடிப்படையில் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதில் தவறு எதுவும் இல்லை. 

அருகதை கிடையாது

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஜனநாயகம் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது. அவரது கட்சி எம்.எல்.ஏ.வை தக்க வைக்க முடியவில்லை. தி.மு.க. குடும்ப கட்சியும் ஆகும். இந்து மதத்திற்கு எதிராக பேசி வருகின்றனர், நாட்டுக்கும் எதிராக பேசி வருகின்றனர். அதை ஏற்றுக்கொள்ள முடியாத தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியே வருகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக காவிரி தண்ணீர் பிரச்சினை எதுவும் கிடையாது. எடியூரப்பா கருத்து கூறியதுபடி ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் தமிழக நலன் கருதி பா.ஜனதா முடிவு எடுத்து செயல்படும். பா.ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை மக்கள் நலனை காக்கும் வகையில் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

முன்னதாக பா.ஜனதா கட்சி சார்பில் தச்சநல்லூர் பெருமாள் கோவிலில் இருந்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் தொடங்கியது. அதனை மாநில தலைவர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் ரெயில்வே மேம்பாலம், உடையார்பட்டி, மதுரை ரோடு வழியாக நெல்லை சந்திப்பை வந்தடைந்தது. 
பின்னர் அங்கு வாக்குச்சாவடி குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லை மாவட்ட தலைவர் மகாராஜன், தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா, நெல்லை மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story