சின்னவெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் அதிகரிப்பு


சின்னவெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி  விலையும்  அதிகரிப்பு
x
தினத்தந்தி 23 Feb 2021 9:04 PM GMT (Updated: 23 Feb 2021 9:04 PM GMT)

வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால், சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த இல்லத்தரசிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர்:
வெளி மாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால், சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பல்லாரி விலையும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த இல்லத்தரசிகளுக்கு இது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்காலிக மார்க்கெட் 
தஞ்சை குழந்தை ஏசு கோவில் அருகே உள்ள தற்காலிக காமராஜர் மார்க்கெட்டில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடந்து வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு மராட்டியம், ஆந்திரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் ஓசூர், கிரு‌‌ஷ்ணகிரி, நீலகிரி, பெரம்பலூர், அரியலூர், தேனி, சிவகங்கை, நிலக்கோட்டை, திருவையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மேலும் இங்கிருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டை, நீடாமங்கலம், திருவையாறு, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் காய்கறிகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
வெங்காயம் விலை கடும் உயர்வு 
வெங்காயத்தின் விலை கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயம் வரத்து வெகுவாக குறைந்து விட்டது. அங்கு பருவம் தவறி பெய்த மழை காரணமாக வெங்காய விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து இருந்து பல்லாரி எனப்படும் பெரிய வெங்காயம் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. இதனால் தஞ்சை மார்க்கெட்டில் கிலோ ரூ.30-க்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை விற்பனை செய்யப்பட்டது. நேற்று கிலோ ரூ.50 முதல் ரூ.65 வரை விற்பனை செய்யப்பட்டது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
ஏற்கனவே சின்ன வெங்காயம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனை செய்யப்பட்டது. வெங்காயத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் குறைந்த அளவே வாங்குகிறார்கள். 
ஏற்கனவே சின்ன வெங்காயம் விலை உயர்வால் அதிர்ச்சி அடைந்த இல்லத்தரசிகளுக்கு தற்போது பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் இருந்து கண்ணீர் வரும். தற்போது விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது என்று இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.
வரத்து பாதியாக குறைந்தது 
இது குறித்து வெங்காயம் மொத்த வியாபாரி சிதம்பரம் கூறுகையில், ‘‘வடமாநிலங்களில் பருவம் தவறி மழை பெய்ததால் பெரிய வெங்காயம் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்திற்கு வெங்காயம் வரத்து பாதியாக குறைந்துள்ளது. 
தஞ்சை மார்க்கெட்டிற்கு வெளி மாநிலங்களில் இருந்து தினமும் 80 முதல் 100 டன் பெரிய வெங்காயம், அதாவது 10 லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்போது 40 டன் வெங்காயம் மட்டுமே வருகிறது. இதனால் மேலும் விலை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது’’ என்றார்.

Next Story