மாவட்ட செய்திகள்

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 181 பேர் கைது + "||" + Police arrested 181 food workers who were involved in a road blockade in Nellai yesterday demanding regular pay.

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 181 பேர் கைது

நெல்லையில் சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல்; 181 பேர் கைது
காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நெல்லையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 181 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி நெல்லையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 181 பேரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

சத்துணவு திட்டத்தில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 35 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வுபெறும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் என உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு நாங்குநேரி ஒன்றிய செயலாளர் ஜெபஸ்டியாள், வள்ளியூர் ஒன்றிய தலைவர் ஜெலட்மேரி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணைத்தலைவர் பிச்சையா, அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் குமாரவேல், மாவட்ட பொருளாளர் கற்பகம், மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் போராட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

181 பேர் கைது

இதைத்தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

உடனே போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 181 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.