துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் பழவூரில் இருந்து கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட 9 சாமி சிலைகள்


துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன்  பழவூரில் இருந்து கும்பகோணம் கொண்டு செல்லப்பட்ட 9 சாமி சிலைகள்
x
தினத்தந்தி 23 Feb 2021 9:33 PM GMT (Updated: 23 Feb 2021 9:33 PM GMT)

வழக்கு விசாரணைக்காக வடக்கன்குளம் பழவூரில் இருந்து 9 சாமி சிலைகள் கும்பகோணத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

வடக்கன்குளம்:
வழக்கு விசாரணைக்காக வடக்கன்குளம் பழவூரில் இருந்து 9 சாமி சிலைகள் கும்பகோணத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. 

சிலைகள் கொள்ளை

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள பழவூரில் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆவுடையம்பாள் சமேத நாறும்பூநாதர் மற்றும் ஆனந்த நடராஜர் சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் சுப்பிரமணியர், சிவகாமி அம்பாள், வெயிலுயுகந்தம்மன், கிருஷ்ணர், அஷ்டதேவர், நடராஜர், அம்மன், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், வள்ளி, தெய்வானை, விநாயகர் மற்றும் நாறும்பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய ஐம்பொன்னாலான 13 சாமி சிலைகள் இருந்தது. இதனை கடந்த 2005-ம் ஆண்டு மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

இதுகுறித்து பழவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த வழக்குகள் சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது.

கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு 

இந்த நிலையில் கொள்ளை போன 13 சிலைகளில் வள்ளி, தெய்வானை, விநாயகர், நாறும்பூநாதருடன் இணைந்த பிரியமுடையாள் ஆகிய 4 சிலைகளை தவிர மற்ற 9 சிலைகளையும் சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். 

பின்னர் சிலைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமான ஸ்ரீவில்லிபுத்தூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அதன்பின்பு நீதிமன்றத்தில் இருந்து கடந்த 2011-ம் ஆண்டு பழவூர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தற்போது இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்காக கோவிலில் ஒப்படைக்கப்பட்ட 9 சிலைகளையும் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

அதன்படி பழவூர் கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷினி தலைமையில் ஊழியர்கள், 9 சிலைகளையும் நேற்று காலையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கும்பகோணத்திற்கு வேனில் கொண்டு சென்றனர். 

Next Story