காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு: தமிழக எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டம்; வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேர் கைது
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக-கர்நாடகா எல்லையில் கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வாட்டாள் நாகராஜ் உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆர்ப்பாட்டம்
காவிரி-வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஓசூர் அருகே தமிழக-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைப்பாளர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக அவர்கள் கர்நாடக பகுதியில் இருந்து தமிழக எல்லையான அத்திப்பள்ளி ஊர்வலமாக வந்தனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த திட்டம் தொடங்கப்படுவது குறித்து கர்நாடக முதல்-மந்திரி, நீர் வளத்துறை மந்திரி மற்றும் உள்துறை மந்திரிக்கு தகவல் தெரியாது. ஆனால், இந்த திட்டம் குறித்து கடந்த 6 மாதங்களாக மத்திய அரசிடம் பேசி, தமிழக முதல்-அமைச்சர் அனுமதி பெற்றுள்ளார். இதையெல்லாம் அறிந்து கொள்ளாத, கர்நாடக முதல்-மந்திரி, உள்துறை மந்திரி மற்றும் நீர்வளத்துறை மந்திரி ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மாநிலம் தழுவிய போராட்டம்
கர்நாடகாவில் மேகதாது திட்டம் நிறைவேற்ற அனுமதி இல்லை. பெங்களூரு, கோலார், தும்கூர், ராம் நகர், சிக்கபள்ளாபூர், தொட்ட பள்ளாபூர் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆனால், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக 118 கி.மீ. தொலைவிற்கு கால்வாய் தோண்டி தண்ணீரை எடுத்து சென்று 342 ஏரிகளில் நிரப்பப்பட உள்ளது. இதற்கு பிரதமர் மோடி அனுமதித்துள்ளார். இந்த திட்டத்தை உடனே தடுக்க வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரிக்கு, வருகிற 27-ந்தேதி வரை கெடு விதிக்கிறோம். அதற்குள்ளாக இந்த திட்டம் நிறுத்தப்படவிட்டால், ஒருங்கிணைந்த கன்னட
அமைப்புகளின் சார்பில், பிரதமர், கர்நாடக முதல்-மந்திரி மற்றும் தமிழக முதல்-அமைச்சர் ஆகியோரை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.
ராஜினாமா
மேலும், இந்த திட்டத்தை கண்டித்து கர்நாடக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்கள், வருகிற 27-ந்தேதிக்குள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து போராட்டத்தில் ஈடுபடவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து, வாட்டாள் நாகராஜ், நிர்வாகிகள் சா.ரா.கோவிந்து, மஞ்சுநாத் தேவா உள்பட 50 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story