புதுச்சேரியில் மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நாராயணசாமி பேட்டி


புதுச்சேரியில்  மக்கள் ஆதரவுடன் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 24 Feb 2021 4:20 AM IST (Updated: 24 Feb 2021 4:20 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கன்னங்குறிச்சி:
மக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
ஆட்சி கவிழ்ப்பு
புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததையடுத்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் நேற்று சேலம் வந்தார். அப்போது நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-
புதுச்சேரி மக்களுக்காக ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க கவர்னராக இருந்த கிரண்பெடி மூலமாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் அரசுக்கு அவர் மூலம் பல்வேறு தொல்லைகள் கொடுக்கப்பட்டன.
இதை தாண்டி வெற்றிகரமாக 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறேன். 90 சதவீத பணிகளை நிறைவேற்றி உள்ளேன். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜனதா, அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மிரட்டி ஆட்சி கவிழ்ப்பு வேலையை செய்திருப்பது அசிங்கமாக உள்ளது. இந்த ஆட்சி கவிழ்ப்பு சதியில் அ.தி.மு.க.வுக்கும் பங்கு உள்ளது.
எனக்கு அச்சமில்லை
புதுச்சேரி மாநிலம் பல்வேறு துறைகளில் மக்களுக்கான திட்டங்களை செய்துள்ளதை மத்திய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. மோடியை பார்த்து எனக்கு ஒருபோதும் அச்சமில்லை, மோடியையும் சந்திப்பேன், அவரது தாத்தாவையும் சந்திப்பேன்.
பல்வேறு துறைகளில் அமைச்சராக இருந்துள்ளேன். என்னை பற்றி மோடிக்கு நன்றாக தெரியும். நான் ஊழல் செய்யாதவன். நாராயணசாமி ஊழல் செய்தார் என்று யாராவது நிரூபிக்க முடியுமா?. விளம்பரங்கள் மற்றும் இலவசங்கள் மூலமாக ஆட்சியை பிடித்து விடலாம் என தமிழகத்தில் அ.தி.மு.க. எண்ணுகிறது. அது ஒருபோதும் நடக்காது.
மக்கள் நலத்திட்டங்கள்
மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுபவர்களுக்கு தான் மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பதை அ.தி.மு.க. உணரவில்லை. தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்க அ.தி.மு.க. அரசின் நிர்வாக திறமை இன்மையே காரணமாகும். மக்கள் ஆதரவுடன் புதுச்சேரியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமையும். அதுபோல் தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைத்து மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராவார்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story