பழுதை சரிசெய்யாமல் இழுத்தடிப்பு: செல்போன் நிறுவனத்துக்கு அபராதம்
பழுதை சரிசெய்யாமல் இழுத்தடித்த செல்போன் நிறுவனத்துக்கு அபராதம் விதித்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
நெல்லை:
பாளையங்கோட்டை திருவனந்தபுரம் ரோட்டை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். கட்டிட ஒப்பந்ததாரர். இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ந் தேதி இணையதளம் மூலம் ரூ.39 ஆயிரம் கொடுத்து செல்போன் ஒன்றை வாங்கினார். அந்த போன் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்து உள்ளது. அதன் பின்னர் வேலை செய்யவில்லை. இதையடுத்து இணையதள சேவை நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விவரத்தினை தெரிவித்துள்ளார். அந்த நிறுவனம் கூறியபடி சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு செல்போனை சரி செய்ய அனுப்பி வைத்தார். ஆனால் பல மாதங்களாகியும் சரிசெய்து திருப்பி கொடுக்கவில்லை.
இதையடுத்து அப்துல் ரகுமான் நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் வக்கீல் பிரம்மா மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தேவதாஸ், உறுப்பினர்கள் முத்துலட்சுமி மற்றும் சிவமூர்த்தி ஆகியோர் தீர்ப்பளித்தனர். அப்துல் ரகுமான் செல்போனை சர்வீஸ் செய்து கொடுக்காதது சேவை குறைபாடு என்றும், அதனால் மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.5 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.20 ஆயிரம் கொடுக்க வேண்டும். அதேபோல் மனுதாரருக்கு செல்போனை சரிசெய்து 1 மாத காலத்தில் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
Related Tags :
Next Story