குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவு
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவு தொகுப்பு வழங்கும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்
பனைக்குளம்,
தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமல் உள்ள குழந்தைகளை கண்டறிந்து, அந்த குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தி இணை உணவு வழங்கிடும் வகையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவை ஒருங்கிணைந்து அணுமின் நிலைய சமூக பொறுப்பு நிதியில் இருந்து, சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து தொகுப்புகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ராமநாதபுரம் அருகே உள்ள அன்னை சந்தியா அங்கன்வாடி மையத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் மற்றும் வயதிற்கேற்ற எடை இல்லாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து இணை உணவு தொகுப்பு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். கூடுதல் கலெக்டர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:- மாவட்டத்தில் 200 குழந்தைகளுக்கு இந்த ஊட்டச்சத்து இணை உணவு தொகுப்பு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுப்பிலும் ஒரு குழந்தைக்கு ஒரு வாரத்திற்கு தேவையான பேரிச்சம் பழம், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் உள்ளன. இதற்காக கல்பாக்கம் அணுமின் நிலையம் சமூக பொறுப்பு நிதியில் இருந்து மாதந்தோறும் தலா ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் செலவிடப்படுகிறது. தேர்வு செய்யப்பட்டுள்ள குழந்தைக்கு தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு இந்த இணை உணவு தொகுப்புகள் வழங்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, தேவிபட்டிணம் ஊராட்சி மன்ற தலைவர் ஹமீதியாராணி ஜாகிர் உசேன் உள்பட அரசு அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story