விழுப்புரம் அருகே துணிகரம்- வீடுபுகுந்து பீரோவை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்- ரூ.11¼ லட்சம் நகையை திருடி சென்றனர்
விழுப்புரம் அருகே வீடுபுகுந்து பீரோவை கொள்ளையர்கள் தூக்கிச் சென்றனர். மேலும் அதில் இருந்த ரூ.11¼ லட்சம் நகையை திருடி சென்றனர்.
அரசூர்,
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பேரங்கியூர் குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் சக்திவேல் (வயது 48). இவர் செங்கல் சூளை வைத்து நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு செங்கல்சூளைக்கு சக்திவேலும் அவரது மனைவியும் சென்றனர். ஆனால் அவர்கள் வீட்டுக்கு திரும்பாமல் அங்குள்ள கொட்டகையிலேயே தங்கிவிட்டனர்.
இந்த நிலையில், வீட்டில் அவரது மகன் சசிகுமார் (25), இவரது மனைவி அரிதா மற்றும் குழந்தை ஆகிய 3 பேரும் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
வெளிப்பக்கமாக பூட்டினர்
செங்கல் சூளைக்கு சென்ற தனது தாய், தந்தை மீண்டும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள் என்று எண்ணி, வீட்டின் முன்பக்க கதவை பூட்டாமல் சாத்திய நிலையில் வைத்திருந்துள்ளார்.
நேற்று அதிகாலை 4 மணிக்கு சசிகுமார், இயற்கை உபாதை கழிப்பதற்காக எழுந்தார். அப்போது கதவை திறந்த போது, வெளிப்புறமாக கதவு பூட்டப்பட்டு இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது நண்பர் வந்து கதவை திறந்து விட்டார்.
பீரோவை காணவில்லை
இந்த நிலையில் வீட்டுக்குள் இருந்த இரும்பு பீரோ மாயமாகி இருந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டை சுற்றிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
அதன்பிறகு கிராம மக்கள் ஆற்று பகுதி மற்றும் வயல் வெளிகளில் தேடினார்கள். அதில் சசிகுமாரின் வீட்டுக்கு முன்பக்கம் உள்ள ஒரு வயல்வெளி பகுதியில் பீரோ, உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. பீரோவில் இருந்த 32 பவுன் நகை மாயமாகி இருந்தது. ஆனால் அதில் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மட்டும் அப்படியே இருந்தது.
இதன் மூலம் கதவு திறந்து இருந்ததால் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை தூக்கிச் சென்று நகைகளை மட்டும் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடு போன நகைகளின் மதிப்பு ரூ.11 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து அறிந்த விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு நல்லசிவம், திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், அய்யனார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
அதன்பிறகு வயல் வெளியில் இருந்த பீரோவை கைப்பற்றினர். மேலும் விழுப்புரம் கைரேகை நிபுணர் தட்சிணாமூர்த்தி நேரில் வந்து சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை சேகரித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story