சட்ட விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் ஐ.ஜி. தினகரன் பேட்டி
மேற்கு மண்டலத்தில் சட்ட விரோத செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் ஐ.ஜி. தினகரன் கூறினார்.
கோவை,
கோவை உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் போலீஸ் ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த பெரியய்யா சென்னை பொதுப்பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதில் சென்னை சட்டம்-ஒழுங்கு தெற்கு கூடுதல் கமிஷனராக பணியாற்றி வந்த தினகரன் நியமிக்கப்பட்டார்.
அவர் நேற்று கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஐ.ஜி. அலுவலகத்தில் பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி உள்ளேன். அதனால் இந்த பகுதி பற்றி ஓரளவு தெரியும்.
மேற்கு மண்டலத்தில் 4 அம்ச திட்டங்களை அமல்படுத்த உள்ளேன். முதல் திட்டம் என்னவென்றால் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் மீது உடனடியாக துரித நடவடிக்கை எடுப்பது. அவர்கள் வைக்கும் கோரிக்கைகள் மீது போலீசார் எந்த அளவிற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
2-வது சட்டவிரோத செயல்கள் எங்கு நடந்தாலும் அவையெல்லாம் தடுக்கப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்படும். 3-வதாக சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நான்காவதாக மேற்கு மண்டலத்துக்குட்பட்ட 8 மாவட்டங்களில் அமைதியான, சுமூகமான முறையில் தேர்தல் நடக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
பிரதமர் நரேந்திரமோடி கோவை வருகையையொட்டி பாதுகாப்பு பணிகளை கோவை மாநகர போலீசார் ஏற்றிருந்தாலும், மாவட்டங்களில் அவர் வருகையையொட்டி தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கு மண்டலத்துக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் உள்ள லாட்ஜ்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள ஐ.ஜி. தினகரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்தவர். கோவையில் உள்ள தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் கடந்த 1988-92-ம் ஆண்டில் பி.எஸ்சி விவசாயம் இளநிலை பட்டம் பெற்றார்.
எம்.எஸ்சி. விவசாயம் பாடத்தில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றவர். 1995-98-ம் ஆண்டில் டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் பி.எச்டி. முடித்த தினகரன் 1998-ம் ஆண்டு ஐ.பி.எஸ். தேறினார்.
இவர் ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று 2018-2020-ம் ஆண்டில் சென்னை பெருநகர வடக்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும், 2020-ம் ஆண்டு முதல் சென்னை பெருநகர தெற்கு சட்டம்-ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும் பணியாற்றியுள்ளார்.
மேலும் 2013-ம் ஆண்டில் இவரின் வீரதீர செயலுக்காக ஜனாதிபதி விருதும், 2019-ம் ஆண்டு சிறந்த பணிக்காக முதல்-அமைச்சர் விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story