மும்பை ஓட்டலில் பிணமாக மீட்கப்பட்ட எம்.பி. தற்கொலையில் பா.ஜனதா பங்கு குறித்து விசாரணை-காங்கிரஸ் வலியுறுத்தல்
மும்பை ஓட்டலில் பிணமாக மீட்கப்பட்ட எம்.பி. தற்கொலையில் பா.ஜனதா பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மாநில உள்துறை மந்திரியிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.
மும்பை,
குஜராத் எல்லையையொட்டி உள்ள யூனியன் பிரதேசமான தாத்ரா நகர் ஹவேலி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் மோசன் தேல்கார்(வயது 58).
இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மும்பை மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். மேலும் அவரது அறையில் இருந்து தற்கொலை கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில் மராட்டிய காங்கிரஸ் நேற்று மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக்கிடம், மோகன் தேல்கார் எம்.பி. மரணத்தில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளது.
மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் தலைமையிலான கட்சி நிர்வாகிகள், மந்திரி அனில் தேஷ்முக்குடன் காணொலி காட்சி மூலம் சந்தித்து இந்த கோரிக்கையை வைத்தனர். அப்போது மந்திரி அனில் தேஷ்முக், இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் காப்பற்றப்பட மாட்டார்கள் என உறுதி அளித்தார்.
இதற்கிடையே மராட்டிய பா.ஜனதா கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் கேசவ் உபாத்யே காங்கிரஸ் கட்சியின் குற்றசாட்டை திட்டவட்டமாக மறுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட அந்த கட்சியின் அனைத்து தலைவர்களும் பொய் சொல்லும் பழக்கம் கொண்டவர்கள். காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த் எதிலும், எல்லாவற்றிலும் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக கருதுகிறார்” என்றார்.
Related Tags :
Next Story