கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்


கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம்
x
தினத்தந்தி 25 Feb 2021 12:43 AM IST (Updated: 25 Feb 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.

கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் கடந்த 20-ந் தேதி நள்ளிரவு விடிய விடிய கனமழை கொட்டியது. குறிப்பாக அதிகாலை 4 மணி முதல் 8 மணி வரை மட்டும் சுமார் 19 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் கடலூரில் பல்வேறு இடங்களில் உள்ள சுமார் 300 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் மற்றும் காய்கறி வகை பயிர்கள், மலர் வகை பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது. இதுதவிர கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது.

ஆய்வு

இந்த நிலையில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை துறை முதன்மை செயலாளருமான ககன்தீப்சிங் பேடி நேற்று கடலூர் வந்தார். பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி முன்னிலையில் கடலூர் நாணமேடு ஊராட்சியில் கனமழையால் பாதிக்கப்பட்ட கோழிக்கொண்டை, சாமந்தி பூ, கத்திரிக்காய் போன்ற தோட்டப்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து குமளங்குளம் ஊராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களையும், காரைக்காடு பகுதியில் நிலக்கடலை பயிர்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையடுத்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப்சிங் பேடி கூறுகையில், பருவம் தவறி பெய்த மழையால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டு வருகிறோம்.

பயிர் சேதங்கள்

இந்த திடீர் மழையால் ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் முற்றிலும் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. மேலும், தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளது. அதனால் பயிர் சேதங்கள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்திருந்தால், காப்பீட்டுத்தொகை உடனடியாக வழங்கப்படும்.
மேலும் சேதமடைந்த பயிர்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் மூலம் அறிக்கை தயார் செய்து, உடனடியாக அரசுக்கு பரிந்துரை செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. முழுமையான அறிக்கை பெற்றதும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடுகள் உடனடியாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட பயிர் வகைகளுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும் என்றார்.
அப்போது கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வேளாண்மை இணை இயக்குனர் ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெயக்குமார், தாசில்தார் பலராமன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, உதவி இயக்குனர் பூவராகவன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Next Story