கணவர், மாமியாருக்கு சிறை


கணவர், மாமியாருக்கு சிறை
x
தினத்தந்தி 24 Feb 2021 7:22 PM GMT (Updated: 24 Feb 2021 7:22 PM GMT)

குறிஞ்சிப்பாடியில் வரதட்சணை கொடுமையால் நர்சு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரது கணவர், மாமியாருக்கு சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கடலூர், 

குறிஞ்சிப்பாடி பழைய போஸ்ட் ஆபிஸ் ரெட்டியார் காலனியை சேர்ந்தவர் தேவராஜ். இவருடைய மகன் ராகுல்ராஜன் (வயது 41). இவர் ஆப்பிரிக்கா நாடு எத்தியோபியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் குண்டியமல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வந்த கருங்குழி நயினார்குப்பத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி (30) என்பவருக்கும் கடந்த 16.9.2015 அன்று திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள், ரூ.1 லட்சம் சீர்வரிசை பொருட்களும் வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்திருந்தனர். இவர்களுக்கு ஹரிணி (3) என்ற குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராகுல்ராஜன் தனது வேலையை விட்டு விட்டு ஊருக்கு திரும்பி விட்டார்.

தகராறு

அதையடுத்து அவர்கள் குடும்பத்துடன் குண்டியமல்லூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய குடியிருப்பில் வசித்து வந்தனர். அப்போது கணவன், மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் செந்தமிழ்ச்செல்வி வாங்கும் சம்பளத்தை தன்னுடையை தாயிடம் தான் கொடுக்க வேண்டும் என்று ராகுல்ராஜன் பிரச்சினை செய்தார்.
இதற்கிடையில் தனது பெண் குழந்தையின் காதணி விழாவில் ராகுல்ராஜன், அவரது தாய் மாரியம்மாள் (67) ஆகிய 2 பேரும் செந்தமிழ்ச்செல்வியிடம் தகராறு செய்தனர். மேலும் அவரது தாய், தந்தையிடமும் சீர்வரிசை பொருட்களை அதிகமாக கொண்டு வரவில்லை என்று சண்டை போட்டு, அவர்களை விழாவில் இருந்து பாதியிலேயே அனுப்பி விட்டனர்.

தற்கொலை

தொடர்ந்து மனைவியிடம் கூடுதலாக நகை, பணம் கேட்டு கணவனும், மாமியாரும் கொடுமைப்படுத்தி வந்தனர். இதையடுத்து ராகுல்ராஜன் தம்பி திருமணத்திற்காக செந்தமிழ்ச்செல்வியிடம் அவரும், மாமியார் மாரியம்மாளும் நகை, பணம் கேட்டு தகராறு செய்தனர். இதனால் மனமுடைந்த செந்தமிழ்ச்செல்வி கடந்த 26.8.2019 அன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராகுல்ராஜன், மாரியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

சிறை தண்டனை

இந்த வழக்கு கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு கூறினார். அதில், இவ்வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால்  ராகுல்ராஜனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், மாரியம்மாளுக்கு  7 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு கூறினார்.
இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் செல்வபிரியா ஆஜராகி வாதாடினார்.

Next Story