மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளர் கைது
பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பொறையாறு:
பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாடுதுறை உதவி கலெக்டரின் நேர்முக பெண் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
காலி மனைக்கு பட்டா
மயிலாடுதுறை மாவட்டம் பொறையாறு பார்வதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோகரன்(வயது 57). இவர், தனது காலி மனைக்கு பட்டா வழங்கக்கோரி தரங்கம்பாடி தாசில்தாருக்கு மனு கொடுத்து இருந்தார். அந்த மனுவை விசாரணை செய்த தாசில்தார், மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்து மனுவை அனுப்பி இருந்தார்.
மனு பரிசீலனைக்கு பின்னர் மனோகரனுக்கு காலி மனை பட்டா தயாராக உள்ள நிலையில் அதை பெறுவதற்காக மயிலாடுதுறை உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு மனோகரன் சென்றுள்ளார்.
ரூ.20 ஆயிரம் லஞ்சம்
அப்போது உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் மலர்விழி, பட்டா வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். மேலும், பட்டாவை பொறையாறு சிவன் கோவில் வடக்கு வீதியில் உள்ள தனது வீட்டிற்கு வந்து வாங்கிச் செல்லுமாறும் கூறியுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மனோகரன் இதுகுறித்து நாகை லஞ்ச ஒழிப்பு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளரை கையும், களவுமாக பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
ரசாயன பவுடர் தடவிய நோட்டுகள்
இதனையடுத்து ரசாயன பவுடர் தடவிய ரூ.20 ஆயிரத்தை மனோகரனிடம் கொடுத்து அதனை மலர்விழியிடம் கொடுக்குமாறு கூறி மலர்விழி வீட்டுக்கு நேற்று அனுப்பி வைத்தனர்.
போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் குமார், அருள்பிரியா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் அடங்கிய 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை பொறையாறில் உள்ள மலர்விழி வீட்டின் அருகில் மறைந்து நின்றனர்.
கையும், களவுமாக பிடித்தனர்
போலீசார் கூறியபடி மனோகரன், மலர்விழியிடம் லஞ்ச பணம் ரூ.20 ஆயிரத்தை கொடுத்து காலி மனை பட்டாவை பெற்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக மலர்விழியை பிடித்தனர்.
மேலும் அவரது கைப்பையில் கணக்கில் வராத ரூ.30 ஆயிரம் இருந்ததை பறிமுதல் செய்து அவரிடம் இருந்த மேலும் இரண்டு பட்டாக்களையும் கைப்பற்றினர்.
கைது
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து மலர்விழியை(57) கைது செய்தனர். அவரிடம் காலை 8 மணிக்கு விசாரணையை தொடங்கிய ேபாலீசார் மாலை 4 மணிக்கு விசாரணையை முடித்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக நாகைக்கு அழைத்து சென்றனர்.
பட்டா வழங்க லஞ்சம் வாங்கிய உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பொறையாறு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story