புயல், மழையால் பயிர்கள் சேதம்: 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு


புயல், மழையால் பயிர்கள் சேதம்: 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு
x
தினத்தந்தி 24 Feb 2021 8:32 PM GMT (Updated: 24 Feb 2021 8:32 PM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் 1,841 விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது.

 மழையால் பாதிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 2020-21-ம் ஆண்டு புரெவி புயல் மற்றும் காலம் தவறிய வடகிழக்கு பருவமழை காரணமாக 1,500 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்தன. இந்த மாவட்டத்தின் பல்வேறு வட்டாரங்களில் மழை மற்றும் புயல் காரணமாக நெல், சோளம், மக்காச்சோளம், உளுந்து, கொண்டைக்கடலை பயிர்கள் சேதமடைந்தன. 
புயல் காற்றாலும், மழைநீர் தேக்கத்தாலும் தொடர்ந்து மழை பெய்ததால் நெற்பயிர்கள் சாய்ந்தும், பூ பிடிக்கும் பருவத்தில் உள்ள கொண்டைக்கடலை, உளுந்து பயிர்களில் பூ உதிர்ந்தும், மக்காச்சோளம், சோளம் பயிர்கள் சாய்ந்தும் பெருத்த சேதம் விளைவித்தது.

நிவாரணம்

திருப்பூர் கலெக்டரின் உத்தரவின் பேரில் திருப்பூர் வேளாண்மை இணை இயக்குனர் மற்றும் தோட்டக்கலை துணை இயக்குனர் தலைமையில் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் கொண்ட சேதார கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு வட்டாரம்வாரியாக பட்டியல் தயார் செய்து நிவாரணத்துக்கு அனுப்பப்பட்டது. 
சேதார சதவீதம் 33 சதவீதத்துக்கும் மேல் உள்ள விவசாயிகளுக்கு இறவை பயிர்களுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ.10 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

1,841 விவசாயிகள்

அதன்படி புெரவி புயலில் உடுமலை வட்டாரத்தில் இறவை பயர்களில் 10 ஹெக்டேர் பரப்பளவிலும், குடிமங்கலம் வட்டாரத்தில் 18 ஹெக்டேர் பரப்பளவிலும் ஏற்பட்ட சேதாரம் கணக்கிடப்பட்டு 36 சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், வெள்ளகோவில், பொங்கலூர் ஆகிய வட்டாரங்களில் காலம் தவறிய வடகிழக்கு பருவமழையினால் 960 ஹெக்டேர் பரப்பளவில் வேளாண்மை மற்றும் 514 எக்டர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களில் சேதாரம் ஏற்பட்டு  1,805 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 69 லட்சம் இழப்பீடு நிவாரணத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Next Story