சேலத்தில் சாலையில் கிடந்த 25 பவுன் நகை, ரூ.4 லட்சத்தை கண்டெடுத்த தொழிலாளி உரியவரிடம் போலீசார் ஒப்படைப்பு
சேலத்தில் சாலையில் கிடந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தொழிலாளி கண்டெடுத்தார். இதை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சேலம்:
சேலத்தில் சாலையில் கிடந்த 25 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை தொழிலாளி கண்டெடுத்தார். இதை உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
சலவை தொழிலாளி
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (வயது 70). இவரது மனைவி பாக்கியம் (65). கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு பையில் 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தாதகாபட்டியில் நடைபெற்ற உறவினர் திருமண விழாவிற்கு சென்று கொண்டிருந்தனர். சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே சென்ற போது மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டு இருந்த பை சாலையில் தவறி விழுந்து விட்டது. இதை கவனிக்காமல் அவர்கள் சென்று விட்டனர். இந்த நிலையில் அந்த வழியாக கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த சலவை தொழிலாளி ரமேஷ் வந்தார். பின்னர் சாலையில் நகை, பணத்துடன் கிடந்த பையை கண்டெடுத்தார். இதையடுத்து அந்த பைைய அவர் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடாஜலத்திடம் ஒப்படைத்தார்.
பாராட்டு
அதை வாங்கி பார்த்தபோது அந்த பையில் ஒரு வங்கியின் கணக்கு புத்தகம் இருந்தது. அதில் இருந்த செல்போன் எண்ணிக்கு அவர் தொடர்பு கொண்டு உங்களது பை என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பணம், நகையுடன் பை காணாமல் போய்விட்டது என்று சுகுமார் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்து இருந்தார்.
அப்போது செல்போன் அழைப்பு வந்ததையொட்டி போலீசார் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு சென்று வெங்கடாஜலத்திடம் இருந்த பையை வாங்கி பார்த்தனர். அப்போது 25 பவுன் நகை, ரூ.4 லட்சம் இருந்தது. பின்னர் நகை, பணத்தை சுகுமாரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதையொட்டி சலவை தொழிலாளி ரமேசை, போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் பாராட்டினர்.
Related Tags :
Next Story