ஊராட்சியில் பணி செய்ய நிதி ஒதுக்காததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் போராட்டம்
ஊராட்சியில் பணி செய்ய நிதி ஒதுக்காததை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நேற்று கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் சுனிதா பாலயோகி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் நா.வெங்கடேசன், யோகநாதன், வார்டு உறுப்பினர்கள் ரம்யா, கோவிந்தம்மாள், மோகன்குமார் ஆகியோர் திடீரென முற்றுகையிட்டு நுழைவாயில் முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
நாங்கள் வெங்கத்தூர் முதல்நிலை ஊராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறோம்.
ஆனால் கடந்த 7 மாதங்களாக எங்கள் ஊராட்சியில் பம்ப் ஆப்பரேட்டர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமலும், எந்த ஒரு வளர்ச்சி பணிகளும் செய்ய அரசு நிதி ஒதுக்காமலும் உள்ளது. இதன் காரணமாக எங்களால் மக்கள் பணியை தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சாலை பணி, குடிநீர் பணிகள், தெரு விளக்குகள் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் போன்ற எந்த பணிகளையும் செய்ய பணம் கொடுக்காததால் மிகவும் அவதியுற்று வருகிறோம். இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை எடுத்து கூறியும் அவர்கள் எங்களுக்கு நிதி ஒதுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்கள் ஊராட்சியில் நிதி ஒதுக்க வலியுறுத்தி கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து அங்கு இருந்த ஒன்றிய அதிகாரிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களிடம் இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்து ஊராட்சியில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் நேற்று கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story