அரும்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய 2 பேர் கைது
அரும்பாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 25 பவுன் நகை, ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
பூந்தமல்லி,
சென்னை அரும்பாக்கம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு (வயது 40). என்ஜினீயரான இவர், எழும்பூரில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பூர்ணிமா (34). இவர், தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார்.
கடந்த 5-ந் தேதி பூர்ணிமா வீட்டை பூட்டிவிட்டு புரசைவாக்கத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிட சென்றுவிட்டார். அப்போது மர்மநபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டனர்.
இதுபற்றி அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையில் ஈடுபட்டவர் பர்தா அணிந்து வந்தது தெரிந்தது. அவர் ஆணா?, பெண்ணா? என போலீசார் விசாரித்து வந்தனர்.
அவர் அணிந்து இருந்த செருப்பு மற்றும் அவரது நடையை வைத்து ஆண்தான் என உறுதி செய்த போலீசார், அந்த வழியே சென்ற வாகனங்களை கண்காணிப்பு கேமரா காட்சிகளில் ஆய்வு செய்தனர். அப்போது பர்தா அணிந்து சென்ற நபர், ஆட்டோவில் ஏறிச்சென்றது தெரியவந்தது. அந்த ஆட்டோ எண்ணை வைத்து கொள்ளையனை போலீசார் தேடி வந்தனர்.இந்தநிலையில் அரும்பாக்கம் பகுதியில் ஒரு ஆட்டோவில் இருந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த ரகுமதுல்லா (35), அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜமாலுதீன் (40) என்பதும், இவர்கள்தான் என்ஜினீயர் சுரேஷ்பாபு வீட்டில் திருடியதும் தெரிந்தது. 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் அண்ணாநகர் போலீஸ் மாவட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசாரிடம் சிக்காமல் இருக்க ரகுமதுல்லா, பெண்கள் அணியும் பர்தா அணிந்து கொண்டு இரவு நேரத்தில் ஆட்டோவில் வந்து பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து திருடுவார்.
அவர் நகைகளை திருடிவிட்டு வரும் வரை ஜமாலுதீன் ஆட்டோவில் காவலுக்கு நிற்பார். இவ்வாறு திருடிய நகைகளை இருவரும் பாதியாக பிரித்து பங்கு போட்டுக்கொள்வதும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதான 2 பேரிடம் இருந்து தங்க கட்டிகள் உள்பட 25 பவுன் நகைகள், ஆட்டோ, வீட்டின் பூட்டை உடைக்க பயன்படுத்திய ஆயுதங்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story