வக்கீல் கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை - சென்னை செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து செசன்ஸ் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தவர் முருகன். இவரது மனைவி லோகேசினி. இவர்கள், கோடம்பாக்கத்தில் வசித்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கோடம்பாக்கம் பகுதியில் புதிதாக வாடகைக்கு வீடு பார்க்க முருகன் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பின்தொடர்ந்து ஆட்டோவில் வந்த கும்பல் அவரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது.
இதுகுறித்து கோடம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், முருகனின் மனைவி லோகேசினி, தனது கள்ளக்காதலன் சண்முகநாதன் என்பவருடன் சேர்ந்து திட்டம் தீட்டி சிலர் மூலம் முருகனை கொலை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து லோகேசினி, சண்முகநாதன், கோலார் சுப்பு, சுப்பிரமணி, முரளி, ஜஸ்டின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி செல்வக் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோகேசினி உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவர்களுக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
Related Tags :
Next Story