பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
விழுப்புரம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அதற்கான தீர்வு எட்டப்படவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சென்னையில் கலந்தாலோசனை நடத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்தனர்.
ஆனால் பொதுமக்களின் நலனை கருதி தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளாமல் கண்டிப்பாக பணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அறிவுறுத்தியதோடு வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்டு பணிக்கு வராதவர்கள் மீது தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. அதோடு பணி ஓய்வு, வார ஓய்வு, மாற்றுப்பணி ஓய்வு எடுக்க அனுமதி பெற்றவர்களுக்கு அந்த ஓய்வை ரத்து செய்து பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் ஏற்கனவே அனுமதி பெற்று விடுப்பு எடுத்தவர்களுக்கு விடுப்பு ரத்து செய்யப்பட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அரசு எச்சரிக்கை விடுத்தபோதிலும் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர், ஏற்கனவே திட்டமிட்ட படி வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை
அதன்படி நேற்று அதிகாலையில் இருந்து போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் அரசு பஸ்களை இயக்காமல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் பயணிகளின் நலனை கருதி பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முடிவு செய்தனர். பணிக்கு வந்திருந்த அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை வரவழைத்து பஸ்களை இயக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.
இருப்பினும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே ஓடின. அந்த பஸ்சும் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது.
வெறிச்சோடிய பஸ் நிலையங்கள்
குறிப்பாக விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஈரோடு, காஞ்சீபுரம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களிலும் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் அந்த பஸ்கள் அனைத்தும் விழுப்புரம் 1, 2, 3-வது பணிமனைகள், கள்ளக்குறிச்சி 1, 2-வது பணிமனைகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, செஞ்சி, திருக்கோவிலூர், திண்டிவனம், சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய 11 போக்குவரத்துக்கழக பணிமனைகளில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் ஒன்றிரண்டு பஸ்கள் மட்டுமே வந்து சென்றதால் பஸ் நிலையங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக எப்போதும் அதிக பஸ் போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும் விழுப்புரம் புதிய பஸ் நிலையமும் பஸ்கள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது. அதுமட்டுமின்றி எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலைகளும் சற்று வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
பொதுமக்கள் பாதிப்பு
மாவட்டம் முழுவதும் நேற்று அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை 80 சதவீத பஸ்கள் இயக்கப்படவில்லை. அரசு பஸ் போக்குவரத்து பெருமளவு முடங்கியதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். பஸ்சிற்காக அவர்கள் பல மணி நேரம் பஸ் நிலையங்களிலேயே காத்திருந்தனர்.
அதுபோல் கிராமப்புறங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படாததால் வேலைக்கு செல்வோரும் மற்றும் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகளும் குறித்த நேரத்திற்குள் செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள் பெருமளவில் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் நேற்று தனியார் பஸ்கள் வழக்கத்திற்கும் மாறாக கூடுதலாக இயக்கப்பட்டது.
40 சதவீத பஸ்கள் ஓடின
மாவட்டம் முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடாததால் அனைத்து தரப்பு மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து வெளியில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் சில டிரைவர்களை வரவழைத்து அவர்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் பஸ் இயக்குதலில் அவர்களின் அனுபவம் குறித்து சோதனை செய்து அவர்களை பயன்படுத்தி அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
அதன்படி காலை 11 மணிக்கு மேல் அந்தந்த அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து மேலும் சில பஸ்கள் இயக்கப்பட்டன. மாலை 6 மணி நிலவரப்படி விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட விழுப்புரம், கடலூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் ஆகிய 6 மண்டலங்களில் மொத்தமுள்ள 3,054 பஸ்களில் 1,300 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாவும், விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களிலும் 600 பஸ்கள் ஓட வேண்டிய நிலையில் 220 பஸ்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் 40 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டுள்ளன என்று போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
மேலும் போக்குவரத்து தொழிலாளர்களின் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதுபோல் அனைத்து போக்குவரத்துக்கழக பணிமனைகள் முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Related Tags :
Next Story