வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேைல நிறுத்தம் பணிகள் பாதிப்பு
வலங்கைமானில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக பணிகள் பாதிக்கப்பட்டன.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட துணைத்தலைவர் கார்த்திகேயன், வட்ட செயலாளர் மதியழகன் ,பொருளாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏமாற்றம்
ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு காலமுறை ஊதியத்தை வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை அனைத்து மட்டங்களில் நிரப்ப வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கிராம உதவியாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக
நேற்று பணிகள் முற்றிலும் முடங்கியது. இதனால் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தாசில்தார் அலுவலகத்துக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நீடாமங்கலம்
கிராம உதவியாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக
நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் வருவாய்த்துறை தொடர்பான பொதுமக்களின் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது. தாசில்தார் மற்றும் சர்வேயர் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் தாசில்தார் அலுவலகத்துக்கு சான்றிதழ் மற்றும் இதர பணிகளுக்காக வந்த கிராமப்புற மக்கள் தங்கள் பணி நிறைவேறாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்தநிலையில் வருவாய்த்துறை கிராம உதவியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளதால் தாசில்தார் அலுவலக பணிகள் முற்றிலுமாக முடங்கியது. மேலும் நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி
வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க திருத்துறைப்பூண்டி கிளையின் சார்பாக திருத்துறைப்பூண்டி தாசில்தார் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் பி.கே.கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் எம்.பாலமுருகன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பி.வி.பாண்டியன், முன்னாள் மாநில அமைப்புச் செயலாளர் தருமையன் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
Related Tags :
Next Story