முகேஷ் அம்பானி வீடு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம கார் - போலீசார் தீவிர விசாரணை


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 25 Feb 2021 11:28 PM IST (Updated: 25 Feb 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

மும்பையில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டு அருகே வெடிப்பொருட்களுடன் நின்ற மர்ம காரால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை,

மராட்டிய தலைநகர் மும்பை அல்டாமவுன்ட் ரோட்டில் ரிலையன்ஸ் குழும தலைவரான பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின்  ‘அன்டிலா' அடுக்குமாடி வீடு அமைந்து உள்ளது. இது பல சொகுசு வசதிகளுடன் கட்டப்பட்ட 27 மாடி கட்டிடமாகும். இந்தியாவில் மிக விலையுர்ந்த வீடாக இது கருதப்படுகிறது. 

இந்த வீட்டின் அருகே உள்ள கார்மிக்கேல் ரோட்டில் நேற்று மாலை சந்தேகத்துக்கு இடமாக ஸ்கார்பியோ கார் ஒன்று நின்றுகொண்டு இருந்தது.
 இதையடுத்து அங்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த மர்ம காரில் ஜெலட்டின் குச்சிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.  மும்பை குற்றப்பிரிவு போலீசார், மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசாரும் விரைந்து வந்தனர். 

இயைடுத்து காரில் இருந்த ஜெலட்டின் குச்சிகளை பாதுகாப்பான முறையில் வெடிகுண்டு நிபுணர்கள் கைப்பற்றினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. முகேஷ் அம்பானி வீட்டுக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ள நிலையில், அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
முகேஷ் அம்பானி வீ்டு அருகே ஜெலட்டின் குச்சிகள் அடங்கிய காரை நிறுத்தி சென்றது யார்? என்று தெரியவில்லை. பயங்கரவாத சதி வேலைக்காக அந்த கார் நிறுத்தப்பட்டதா? அல்லது மிரட்டல் விடுப்பதற்காக நிறுத்தப்பட்டதா? என்பது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் காரை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து மாநில உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் கூறுகையில், "மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் இருந்து ஒரு ஸ்கார்பியோ வேனில்  ஜெலட்டின் குச்சிகள் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றார். 
முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகில் காாில் வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story