திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய விதை விலை கடும் உயர்வு முறைப்படுத்த விவசாயிகள் கோரிக்ை


திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய விதை விலை கடும் உயர்வு முறைப்படுத்த விவசாயிகள் கோரிக்ை
x
தினத்தந்தி 25 Feb 2021 11:46 PM IST (Updated: 25 Feb 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய விதை விலை உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காய விதை விலை உயர்வை முறைப்படுத்த வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் முறையிட்டனர்.
சின்ன வெங்காயம் விதை 
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள் மனுக்கள் அளித்து பேசியதாவது:-
மனோகரன் (தமிழக விவசாயிகள் சங்கம்):-
குடிமங்கலம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக விவசாயிகளுக்கு சின்ன வெங்காய விதைகள் இலவசமாக வழங்கப்பட்டது. இதில் உண்மையாக சாகுபடி செய்ய ஆர்வம் அதிகம் உள்ள விவசாயிகளுக்கு விதைகள் வழங்கப்படவில்லை. பல விவசாயிகள் விதையின்றி அதிக விலை கொடுத்து தரமற்ற விதைகளை வாங்கி விதைக்க வேண்டிய அவல நிலை உள்ளது. சின்ன வெங்காய விதை கிலோ ரூ.4 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.13 ஆயிரம் வரை விற்பனை செய்கிறார்கள். சின்னவெங்காய விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் ஆர்வமுடன் அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறார்கள். விதைச்சான்று பெற்றவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கும் சின்ன வெங்காய விதைகளை விற்பனை செய்கிறார்கள். எனவே இதை முறைப்படுத்த வேண்டும்.
கிராமப்புறங்களில் விவசாயிகள் தங்கள் மருத்துவம், அத்தியாவசிய தேவைகளுக்காக தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள பணத்துக்கு வட்டியின் மீது 20 சதவீதம் அளவுக்கு வருமான வரி பிடித்தம் செய்கிறார்கள். வரி பிடித்தம் செய்த தொகையை விவசாயிகளுக்கு மீட்டுக்கொடுக்க வேண்டும்.
ஈஸ்வரமூர்த்தி (உழவர் உழைப்பாளர் கட்சி) :- அமராவதி அணையில் போதுமான தண்ணீர் உள்ளது. ஏப்ரல் மாதத்துக்கு பிறகு புஞ்சை விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இதனால் கரும்பு, நெல் சாகுபடி செய்ய வசதியாக அமையும். தட்கல் முறையில் விவசாய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, கம்பம் நடுவது, கம்பிகள் இழுப்பது என்று மேலும் ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை முறைப்படுத்த வேண்டும்.
மழையால் பயிர்கள் பாதிப்பு
குமார் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்) :-
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் பருவம் தவறி பெய்த மழையால் உடுமலை, தாராபுரம், காங்கேயம், மடத்துக்குளம் வட்டங்களில் நெல் பயிர் சேதமடைந்தது. கொண்டைக்கடலை, கொத்துமல்லி பயிர் போன்றவையும் பாதிப்புக்குள்ளானது. சோளம், சின்னவெங்காயம், காய்கறி பயிர்கள் அழுகி போனது. ஊத்துக்குளி, அவினாசி, பல்லடம் பகுதிகளில் சோளத்தட்டு பாதிக்கப்பட்டு கால்நடைகளுக்கு தீவனம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மழை வெள்ளம் பாதித்த மாவட்டமாக திருப்பூரை அரசின் பட்டியலில் சேர்க்க வேண்டும். பயிர்ப்பாதிப்புகளை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
உடுமலை அமராவதி அணைக்கு அருகே ஜம்புகல்கரடு மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள மக்கள் சுண்டக்காய் பறித்தும், அரப்பு தளை பறித்தும் விற்பனை செய்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்த மலைப்பகுதியில் தனியார் சிலர் மரங்களை வெட்டி பாறைகளை வெடி வைத்து தகர்த்து பாதை அமைத்துள்ளனர். இந்த மலைப்பகுதியை அதிகாரிகள் ஆய்வு செய்து இயற்கை மாறாமல் வசதி ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.
காளிமுத்து (தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்):- விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களின் பெற்ற பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் முறையாக கடனை திருப்பி செலுத்தியவர்களுக்கு கடன் ரத்து செய்யப்படவில்லை. மேலும் கடன் வழங்கப்படவில்லை. அவர்களுக்கும் சலுகையை அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வெள்ளகோவில் ஒன்றியம் சேனாபதிபாளையம் ராமலிங்கபுரத்தில் தங்கவேல் என்பவருக்கு சொந்தமான 30 செம்மறி ஆடுகளை நாய்கள் கடித்து கொன்றுவிட்டது. செம்மறி ஆட்டை வைத்தே தங்கவேல் பிழைப்பு நடத்தி வருகிறார். அரசிடம் இருந்து இழப்பீடு பெற்றுக்கொடுக்க வேண்டும்.
உப்பாறு அணை
வட்டமலை கிராமத்தில் உள்ள கார்பன் தொழிற்சாலை நாள் ஒன்றுக்கு 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பயன்படுத்துகிறது. இதனால் தொழிற்சாலையை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அனுமதிபெற்று அந்த தொழிற்சாலை இயக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து தொழிற்சாலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பாறு அணையின் பிரதான இரண்டு கால்வாய்களை தூர்வாரிய பிறகு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும்.
விவசாயி பழனிசாமி பேசும்போது, அலங்கியத்தில் குரங்கு தொந்தரவு அதிகமாக உள்ளதால் கூண்டு வைத்து குரங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Next Story