கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகை
கூட்டுறவு வங்கியை விவசாயிகள் முற்றுகையிட்டனர்
க.பரமத்தி
கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை அருகே அஞ்சூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் கீழ்பவானி வாய்க்கால் மூலம் விவசாயிகள் நெல், கரும்பு, மக்காச்சோளம், கிழங்கு வகைகள், தென்னைமரம் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த விவசாயிகள் விவசாயம் செய்வதற்காக தமிழக அரசு சார்பில் கூட்டுறவு வங்கியில் வட்டி இல்லா பயிர்க்கடன் வழங்குவார்கள். அந்த பயிர்க்கடனை ஒரு வருடத்திற்கு (365நாட்களுக்குள்) கட்டினால் வட்டி கிடையாது. ஒரு நாள் தள்ளி கட்டினாலும் வட்டி கட்ட வேண்டும். இந்த நிலையில் அஞ்சூர் ஊராட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாண்டிலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்கடன் வாங்கியுள்ளனர். அந்தக் கடனை 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் முழுவதுமாக கட்டி விட்டனர். இதில் 2020 பிப்ரவரி மாதத்திற்கு மேல் வாங்கிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து என தமிழக அரசு அறிவித்தது. அதனடிப்படையில் அஞ்சூர் ஊராட்சி பாண்டிலிங்கபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பயிர்க்கடன் ரத்து செய்தற்கான ரசீதை கொடுப்பதற்காக நேற்று காலை விவசாயிகளை வரச் செய்தனர். இதில் கடந்த மாதம் கட்டிய விவசாயிகள் பாண்டிலிங்கபுரம் கூட்டுறவு வங்கியின் முன்பு வந்து முற்றுகையிட்டனர். அப்போது நாங்கள் வாங்கிய பயிர் கடனையும் ரத்து செய்து எங்களுக்கு மீண்டும் நாங்கள் கட்டிய பணத்தை தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் எங்களது கோரிக்கையை நிறைவேற்றி விட்டு பயிர்க் கடனை ரத்து செய்ததற்கான ரசீது வழங்க வேண்டும் என முற்றுகையில் ஈடுபட்டனர். இதனால் சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி தலைவர் குழந்தைவேலு, செயலாளர் மணி ஆகியோர் ரசீது இப்போது கொடுக்க மாட்டோம் என உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story