நாமக்கல்லில் 4-வது நாளாக அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் பெண் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு
நாமக்கல்லில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல்:
நாமக்கல்லில் நேற்று அங்கன்வாடி பணியாளர்கள் 4-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது பெண் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது.
இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை தாங்கினார். இதில் மாநில துணைத்தலைவர் ஜெயக்கொடி, சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
பெண் மயக்கம்
தொடர்ந்து போராடி வரும் இவர்கள் சாமியானா பந்தல் அமைத்து கொள்ள போலீசார் அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே சேலை மற்றும் துணியால் கூடாரம் போல அமைத்து, அதற்கு அடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பிற்பகல் 2.30 மணி அளவில் நன்செய்இடையாறு அங்கன்வாடியில் பணியாற்றி வரும் குர்ஷித் பேகம் (வயது45) என்ற பெண் மயக்கம் அடைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சின்ராஜ் எம்.பி. ஆதரவு
உடனடியாக சக பணியாளர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர் 108 ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு, எர்ணாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி பணியாளர்களை நாமக்கல் எம்.பி. சின்ராஜ் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அங்கன்வாடி பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.
Related Tags :
Next Story