கருணாநிதியின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம். மு.க.ஸ்டாலின் பேச்சு.
கருணாநிதியின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருவண்ணாமலை
செயல்வீரர் செயலி அறிமுக விழா
திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலை சாரோனில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் செயல்வீரர் செயலி அறிமுக விழா நேற்று நடைபெற்றது. தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தணிக்கை குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன், மு.பெ.கிரி எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி செயலாளர் கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறியாளர் அணி மாநில துணைச் செயலாளர் கு.கருணாநிதி வரவேற்றார்.
நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் இளைஞர் அணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர் பி.டி.ஆர்.ப. தியாகராஜன் எம்.எல்.ஏ., மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., பொறியாளர் அணி மாநிலச் செயலாளர் துரை.கி.சரவணன் எம்.எல்.ஏ., துணைச் செயலாளர்கள் கு.சண்முகசுந்தரம் எம்.பி., வே.உமாகாந்த், நரேந்திரன், சி.பிரதீப் உள்பட பலர் வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் செயல்வீரர் செயலியை அறிமுகம் செய்து அதில் 3 காணொலி பதிவுகளை பதிவிட்டு, செயலியின் செயல்பாட்டை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
மக்கள் செல்வாக்கு
தேர்தல் என்னும் ஜனநாயக போர்க்களத்தில் உறுதியுடன் நிற்கும் கழக உடன்பிறப்புகளுக்கு கூர்தீட்ட அறிவியல் ஆயுதம் ஒன்றை வழங்கும் நிகழ்ச்சியாக இந்த நிகழ்வு அமைந்து உள்ளது. கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இந்த செயலியை முழுமையாக பயன்படுத்தி கட்சியை வெற்றி பெற செய்ய முனைப்பாக உள்ளீர்கள்.
போர்க்களம் எதுவாக இருந்தாலும் வெற்றி தி.மு.க.விற்கு தான் என்பதை மரணத்திலும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றிபெற்ற கருணாநிதியின் உடன்பிறப்புகளான நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நிரூபிக்க வேண்டும். தி.மு.க.வின் ஒவ்வொரு உடன்பிறப்புகளும் செயல்வீரர்கள் தான்.
பகல் கனவு
இந்த தேர்தல் களத்தில் தி.மு.க.விற்கு எதிராக சில ெபாய்களை பரப்பிவிட்டு வெற்றி பெற்று விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். அவர்களது பகல் கனவை தடுத்து தூங்கவிடாமல் செய்வதற்கு தான் இந்த செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது.
இன்று வாழ்க்கை முறை மாறிவிட்டது. காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக செல்ேபானை எடுத்து பார்ப்போம். அதில் வாட்ஸ்-அப், பேஸ்புக் போன்ற எல்லாவற்றிலும் செய்திகள் வருகின்றன. இதில் உண்மை செய்திகளை விட பொய் செய்திகள் வரிசை கட்டி நிற்கின்றன. அதை தான் மக்கள் இன்று நம்ப வேண்டி உள்ளது.
பொய் பிரசாரத்தை விரட்டி அடிப்பதற்கும், அவதூறுகளை முறியடிப்பதற்கும் தான் இந்த செயலி. இந்த செயலியில் எதிரிகளுக்கான பதிலடிகள் வந்து கொண்டே இருக்கும். ஆதாரமான புகைப்படங்கள், வீடியோக்கள் வரும். அதில் 3 முறை கிளிக் செய்தால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றில் பதிவாகிவிடும். அதுபோல் வாட்ஸ்-அப் குரூப்களில் அதனை பகிரலாம்.
குறிப்பாக பெண்களிடம் இது பரவ வேண்டும். அவர்களது கையில் இருக்கும் செல்போனில் நமக்கு எதிரான செய்திகள் அதிகளவில் பரப்பப்படும். அதனை முறியடிப்பதற்கு இந்த செயலி பயன்படும். இதற்காக நீங்கள் செலவிட வேண்டியது ஒரு நாளைக்கு 10 அல்லது 15 நிமிடங்கள் தான். ஒவ்வொரு வாக்கும் தேர்தல் களத்தில் நமக்கு முக்கியமானது. பொய் பிரசாரத்தினால் அது தளர்ந்து விட கூடாது.
பல்வேறு அணிகளை சார்ந்து இருக்கிற 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் நினைத்தால் ஒரு மணி நேரத்தில் கோடிக்கணக்கான பேரிடம் நமது செய்திகளை கொண்டு போய் சேர்த்து விட முடியும். ஒரு பொதுக்குழு கூட்டத்தையே காணொலி காட்சி மூலம் நடத்தி இந்திய அரசியல் களத்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பெருமைக்குரிய கட்சி தான் திராவிட முன்னேற்ற கழகம்.
பதிய வைப்போம்
தகவல் தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி எதிரிகளின் பொய்களை தவுடுபொடி ஆக்கிடுவோம். தலைவர் கருணாநிதியின் சாதனைகளை ஒவ்வொருவர் உள்ளத்திலும் பதிய வைப்போம். அவரது வழியில் தி.மு.க. அரசு அமைக்க உறுதியேற்று மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவோம். மக்களின் கோரிக்கைகளை 100 நாளில் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story